சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


பிரிட்டிஷ் உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு

Posted: 04 May 2012 09:24 AM PDT


பிரிட்டனில் நடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கான்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் டெமொகிரட்டிக் கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அதேவேளை, எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரும் வெற்றி பெற்று வருகிறது. 



அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி கவுன்ஸில்களுக்கான முடிவுகள் வந்திருக்கும் நிலையில், இதுவரை தொழிற்கட்சி 470 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

கான்சர்வேட்டிவ் கட்சி சுமார் 280 இடங்களை இழந்திருக்கிறது. லிபரல் டெமொக்கிரட்டிக் கட்சி 180 க்கும் அதிகமான இடங்களை இழந்திருக்கிறது.

வாக்களிப்பு வீதம் கடந்த 12 வருடங்களில் இந்தத்தடவை மிகவும் குறைவாகும்.

அரசாங்கத்தின் செலவு வெட்டுத் திட்டத்துக்கான மக்களின் தீர்ப்பாக இந்த முடிவுகளைப் பார்க்க முடியும் என்று ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.



உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக தமிழ்க் கல்வி மாநாட்டில் வாசிக்கப்படவுள்ள ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான அழைப்பு

Posted: 04 May 2012 09:23 AM PDT

அனைத்துலக தமிழ்க் கல்வி மாநாட்டில் வாசிப்பதற்காக ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு, உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இதன் விவரம் பின்வருமாறு:

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம், 5ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக தமிழ்க் கல்வி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களையும், அவற்றை அனுப்பி வைப்பதில் ஆர்வமுள்ளவர்களையும் நாம் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

மேற்படி தமிழ்க் கல்வி மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களையும் அபிமானிகளையும் நாம் அழைக்கின்றோம், இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு. துரை கணேசலிங்கமும், அனைத்துலகக் கல்விப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு வி. ஏஸ். துரைராஜா அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது தமிழ் மக்கள் தாயகங்களான தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வெளியே வாழும் தமிழரை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அவையாவன- ஐரோப்பிய ஆட்சிக் காலத்தில் புலம் பெயர்ந்து சென்றோர் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்து சென்றோர் ஆகும்.

தமிழ் மொழியை கற்பதிலும், கற்பிப்பதிலும், இவ்விரு பிரிவினரும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறுபட்டவையாகும். இந்த விடயங்களை நாம் ஆய்வு செய்து இனங்கண்டு தீர்ப்பதன் மூலம் தமிழகத்திற்கும், ஈழத்திற்கும் வெளியே வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக, தமிழ்ச் சிறார்கள் இனிதான மொழியாம் நமது தமிழ் மொழியை பேசவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தோராக வாழ்வதை உறுதிப்படுத்தும் நோக்கோடு தான், இந்த அனைத்துலக தமிழ்க் கல்வி மாநாட்டை, உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் முதற்தடவையாக நடத்த தீர்மானித்துள்ளது என்ற நற் செய்தியை அனைத்து தமிழ் மக்களோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழர்கள் ஒரு தனி இனம், அவர்கள் மொழியாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் தனித்துவமானவர்கள் என்பதை அடையாளப்படுத்துவது மட்டுமன்றி தமிழர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமானது.

நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தயாரிக்கவுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாட்டு அடையாளங்கள், அவர்தம் சிறப்பியல்புகள் ஆகியவை உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாகவுள்ளோம்.

எனவே எமது இந்த அறிக்கையில் நாம் சுட்டிக் காட்டியுள்ள பின்வரும் வினாக்களுக்கு பதிலாக அமையக் கூடிய விடயங்களை தங்கள் ஆய்வுக்கட்டுரைகளில் உள்ளடக்கி எமக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ் மொழியின் பெயரால் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

கேள்விகள் பின்வருமாறு:-

1. நீங்கள் வாழுகின்ற நாட்டில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்ன?

2. நீங்கள் வாழுகின்ற நாட்டில் தமிழ் மக்கள முதன் முதலில் குடியேறியது எப்போது ?

3. நீங்கள் வாழுகின்ற நாட்டில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளின் எண்ணிக்கை?

4. நீங்கள் வாழுகின்ற நாட்டில் தமிழ் கற்கும் பிள்ளைகள் எத்தனை பேர்?

5. நீங்கள் வாழுகின்ற நாட்டில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை நடத்துவோர் யார்?

6. நீங்கள் வாழுகின்ற நாட்டில் தமிழைக் கற்பதில் நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் யாவை? - விரிவாகக் கூறுவதானால் பாடநூல் இன்மை, பாடத்திட்டம் இல்லாமை, போதிய ஆசிரியர் இல்லாமை, ஆசியர்களுக்கான போதிய பயிற்சி இல்லாமை, மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் இல்லாமை, பெற்றோர்கள் இல்லாத தமிழ் மொழி மீதான ஆர்வம், நேரப் பற்றாக்குறை, தமிழ் மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்களின் தட்டுப்பாடு மற்றும் ஏனைய சிக்கல்கள்.

7. நீங்கள் வாழுகின்ற நாட்டில் தமிழ் மொழியை கற்பதிலும் கற்பிப்பதிலும், நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன? உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பவை மற்றும் நீங்கள் வாழும் நாட்டில் எதிர்பார்ப்பவை.

மேற்படி விடயங்களை உள்ளடக்கி எழுதப்படும் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை முக்கியமாக எட்டு பக்கங்களுக்கு மேற்படாமல் தமிழில் தட்டச்சு செய்து யூலை மாதம் 1ம் திகதிக்கு முன்பாக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அல்லது தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஓரிரு கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

மட்டக்களப்பில் மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Posted: 04 May 2012 09:21 AM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யானைகட்டியவெளியில் பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளான்.


நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யானைகட்டியவெளியை சேர்ந்த அரசரட்னம் இன்பராசா (15வயது) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சிறுவன் தமது மாடுகளை கட்டுவதற்காக, மாடு மேய்க்கும் பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது அதற்குள் இருந்த பொருள் ஒன்று வெடித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த சிறுவனின் கை சேதமடைந்துள்ளதுடன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க குரல் கொடுப்போம்: நா.க.தமிழீழ அரசாங்கம்

Posted: 04 May 2012 09:20 AM PDT




சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகிறது.


இந்நிலையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தி, ஈழத்தமிழர்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதிபூணுவோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

கவனயீர்ப்பு நிகழ்வுகள், பரப்புரைகள், வணக்க நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் என பல்வேறு வகையிலும், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்த உலகெங்கும் வாழும் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில், சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி, தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது மாகாண ஆளுநர்களின் தலைமையில், போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளை, தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.

ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தாயக தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை, போரில் மடிந்தவர்களை நினைவுகூர்ந்து வெளிப்படுத்த முடியாத இன்றைய இலங்கைத்தீவின் சூழலில், இனநல்லிணக்கம் என சொல்லாடல் ஊடாக சர்வதேசத்தினை ஏமாற்றி வரும் சிறிலங்கா அரசாங்கமானது, தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே, இந்நிகழ்வுகளை முன்னெடுக்க முனைகின்றது.

இதேவேளை, மே-18ஆம் நாள் போரின் வெற்றிநாளாக காலி முகத்திடலில் வெற்றி அணிவகுப்புக்கு சிங்கள தேசம் தயாராகி வருகின்றது.

இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை உறுதியெடுப்போம். சிறிலங்கா தொடர்பில் ஒரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்துவோம்!

ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாளர் நாயகத்தை கோருவோம்!

மேற்கூறிய கோரிக்கைககைள சர்வதேசம் நோக்கும் இன்னும் உரக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் முழங்குவோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.


முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய இருவர் கைது

Posted: 04 May 2012 09:18 AM PDT


முல்லைத்தீவு, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இருவரை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸார் நடாத்திய சோதனையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வெட்டி, எடுத்துச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த நான்கு மற்றும் ஏழு அடி உயரமான மரக்குற்றிகள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மரங்களின் தற்போதைய பெறுமதி இரண்டு லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மனவளர்ச்சி குன்றிய இளைஞனை கடலில் மூழ்கடித்த சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் விசனம்

Posted: 04 May 2012 09:17 AM PDT


மனோரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரை கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தாக்கி மூழ்கடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர், தான் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


தான் பிழையேதும் செய்யாதபோதும் மூன்று வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மனோரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனை கரையேறவிடாமல் அடித்துத் துரத்தியதை கண்டு, அவனுக்கு உதவும் நோக்கில் தான் சம்பவ இடத்துக்கு சென்றதாக சந்தேக நபரான பத்திரகே கொழும்பு கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பதிவாகியுள்ள வீடியோவில் தான் இல்லை எனவும் இதை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் எனவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள தன்னையும் பிணையில் செல்ல அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டினார்.

சந்தேக நபரின் வேண்டுதலைக் கவனத்தில் எடுத்த நீதவான், மேல்நீதிமன்றில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்யும்படி ஆலோசனை தெரிவித்தார். மேலும், சந்தேக நபர் மே 17 ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான பம்பலப்பிட்டி பொலிஸ் கான்ஸ்டபிள் திமுத்து சோம்னாஸ் சுகவீனம் காரணமாக சிறையில் இருக்கும்போது ஜனவரி 2010 இல் இறந்துவிட்டார்.

இரண்டாவது சந்தேகநபரான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.எம்.விரேந்திர வீரவர்தன தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகதாக கூறப்படும் லொத்தர் டிக்கட் விற்பவர் ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி இரத்மலானையைச் சேர்ந்த தமிழ் இளைஞன், பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பால்மா, சமையல்வாயு விலை அதிகரிப்பே அரசாங்கத்தின் வெசாக் தின செய்தி!- ரணில் கடும் கண்டனம்

Posted: 04 May 2012 09:16 AM PDT


பால்மா, சமையல் வாயு விலை அதிகரிப்பே அரசாங்கம் விடுத்துள்ள வெசாக் தின செய்தியென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இன்று சமையல் எரிவாயுவின் விலைகளை அதிரித்துள்ளதுடன் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மே தினத்தை சம்பள அதிகரிப்பு கோரி நடத்தினோம். தோட்டத் தொழிலாளர்கள் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் வெள்ளைவான் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதுடன் அரசியல் தீர்வினை வலியுறுத்தியும் இந்த மே தினத்தை நடத்தினோம்.

சகல இன மக்களும் சமமாக வாழ்வதற்கு அரசியல் தீர்வு முக்கியமானது. வடக்கு மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நாம் கண்டோம். அவர்களுக்கு சம அந்தஸ்தினை பெற்றுக் கொடுக்க இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ரவி கருணாநாயக்க தெரிவிக்கையில்,

அரசாங்கம் வெசாக் காலத்தில் பால்மாவின் விலையை அதிகரித்ததுடன் எரிவாயுவின் விலையை 350 ரூபாவால் அதிகரித்துள்ளது.

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் புலி முத்திரை குத்த முற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பேசுகையில் தெரிவித்தார்.

மே தினத்தில் புலி கொடி சம்பவப் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் அரசு நிறுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 

கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்:ஏரிமலையின் சாயல்! மக்கள் பதற்றம்

Posted: 04 May 2012 09:14 AM PDT





கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டின் அருகில் உள்ள நிலத்திலிருந்து இன்று புகை வெளியாகியுள்ளது.



கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டின் அருகில் உள்ள நிலத்திலிருந்து இன்று புகை வெளியாகியுள்ளது.வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளவில் கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக குழி தோண்டிய போது, புகை வெளியாகியுள்ளது.




குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களாக புகை வெளிவந்த வண்ணமுள்ளன.


நிலத்திலிருந்து திடீரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச மக்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

2ம் இணைப்பு

தோண்டப்பட்ட குழியிலிருந்து வெளியேறிய புகை, தீயாக சுவாலை விட்டு எரிவதால் அது எரிமலையின் சாயலை ஒத்திருப்பது போல தோன்றுவதால் அப்பிரதேச மக்கள் மிகுந்த பதற்றத்தோடு இருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெந்நீரூற்றுக் கிணறுகளும் இப்பிரதேசத்திலேயே இருப்பதனால், இங்கு எரிமலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என மக்கள் மேலும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.







This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ்.நாகவிகாரையில் துப்பாக்கிச் சூடு - 2 சிறிலங்கா இராணுவத்தினர் பலி

Posted: 04 May 2012 09:09 AM PDT


யாழ்ப்பாண நகரில் இன்று காலை இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினரே உயிரிழந்தவர்களாவர்.

சிறிலங்காப் படையினர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கை அடுத்து, ஒருவர் மற்றவரைச் சுட்டுக்கொன்ற பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Posted: 04 May 2012 09:06 AM PDT


கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்தச்சம்பவம் கடந்ந இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார்.

இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டுப்பிரஜைகளுக்குக் கூட இங்கு தமது நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமைகள் தோன்றியிருப்பதாகவும் இதனால் தாயகம் வரும் ஏனைய பிரஜைகள் மத்தியிலும் இவ்வாறான கொலைகள் பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் அங்குள்ள கல்வியியலாளர்கள் இவரின் இந்தக் கொலை தொடர்பில் தெரிவிக்கும் போது குறிப்பிட்டனர்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளைப்பொலிசார் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் இந்தக்கொலைக்கு பின்னர் இங்கு பெரும் பதற்றமான நிலைமைகள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் பான் கீ மூன் நடவடிக்கை எடுக்கவில்லை: இன்னர் சிட்டி பிரஸ்

Posted: 04 May 2012 09:01 AM PDT


சர்வதேச ஊடகவியலாளர் தினமாகிய நேற்று, ஐக்கியநாடுகள் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், இலங்கையின் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.


எனினும் இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று இக்கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் குற்றம் சுமத்தினர்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து அவரின் மனைவியால் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கோரிக்கை ஒன்று கையளிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.

பிரான்ஸ் மற்றும் கீரிக் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற நேற்றைய நிகழ்வில், பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியபோதும் அந்தக்கேள்விக்கு பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

பிரித்தானிய மனித உரிமை அறிக்கையை கோத்தபாய விமர்சிக்கிறார்

Posted: 04 May 2012 09:00 AM PDT


பிரித்தானியாவின் 2011 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவை என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம், சிறுவர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் திட்டத்தின் கீழ் இன்னும் 600 சிறுவர்கள் வரை காணாமல் போயுள்ளனர் என்று பிரித்தானிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள கோத்தபாய, இதில் பெரும்பாலான சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக தமது இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு சிறுவர்கள் உட்பட்ட ஆண், பெண் என்று 30ஆயிரம் பேர் வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனையிலேயே இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதில் விடுதலைப்புலிகளின் உறுப்பினரும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான அடேல் பாலசிங்கம், சிறுவர் படை அணிவகுப்பின் போது பிரசன்னமாகியிருந்தார்.

இந்தநிலையில் தமது பிள்ளைகளை காணவில்லை என்று 676 முறைப்பாடுகள் யுனிசெப்புக்கு கிடைத்துள்ளன. இதில், 64 வீதமான முறைப்பாடுகள், தமிழீழு விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாடுகளாகும்.

இந்த முறைப்பாட்டு அறிக்கை பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸிடமும் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒலரா ஒட்டுனு இலங்கைக்கு வந்தபோது அவரிடம் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதியளித்தனர். எனினும் அவர்கள் அந்த நடவடிக்கையை தொடர்ந்தனர்.

இதேவேளை, 2001 ஆண்டில் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின்போதும் சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்புகள் இருந்ததாக கோத்தபாய ராஜபக்ச கூறினார்.

வடக்கில் உள்ள இராணுவத்தைக் குறைப்பதில் இலங்கை அக்கறை காட்டவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு

Posted: 04 May 2012 08:59 AM PDT


இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில், இலங்கையின் வடக்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர்.

அத்துடன் 2010 இல் காணாமற்போன கேலிச் சித்திரவடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை உள்ளடங்கலாக, கடந்த காலங்களில் காணாமற் போனோர் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக,இலங்கைப் பொலிஸார் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் பிரித்தானிய வெளியுறவுப் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் நடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்த முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை என பிரித்தானிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அறிக்கை, உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த இலங்கை தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், இலங்கையில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டில் கேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் பிரித்தானிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் தனது சொந்தக் குழந்தை குறித்தே அஞ்சுகிறது: கரு ஜயசூரிய

Posted: 04 May 2012 08:57 AM PDT


தகவலறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களின் தன்மைகளைக் கொண்ட புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலத்தைப் போன்று தனது முயற்சியை தோற்கடிக்காமல் இம்முறை தனக்கு ஆதரவு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுப்பணத்தை அரசாங்கம் பொறுப்புடன் செலவிட்டால் இந்த சட்டமூலம் குறித்து அரசாங்கம் அஞ்சத் தேவையில்ல என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார். 'அரசாங்கம் தனது சொந்தக் குழந்தை குறித்தே அஞ்சுகிறது' என அவர் கூறினார்.

தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கிறது என மக்கள் அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தகவலறியும் சட்டமூலத்தை நிறைவேற்றினால் சர்வதேச அரங்கில் சாதகமான நிலையை பெறும் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய நூதனசாலைக்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு

Posted: 04 May 2012 08:56 AM PDT


கொழும்பு தேசிய நூதனசாலையின் பாதுகாப்பிற்கு நிரந்தர பொலிஸ் காவலரண் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நூதனசாலையில் தொல்பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில், சில ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுகந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான மரங்களை றூச் தேசியப் பூங்காவில் நாட்டும் கனடியத் தமிழர் பேரவை நிகழ்வு

Posted: 04 May 2012 08:54 AM PDT


மரம் வளர்த்தல் தொடர்பாக உயரிய எண்ணங்களைக் கொண்ட தமிழர் குமுகத்தின் அனைத்து அகவையினரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வு இரண்டாவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது.


கனடாவின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அளப்பெரும் பணியிற் பங்கேற்றிட டேவிட் சுசுக்கி அமைப்பு மற்றும் றோணா புறநகர் மீள் காடு வளர்ப்புத் திட்டம் என்பவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தொண்டர்கள் இவ்வாண்டு கைகோர்க்கின்றனர்.

பாப் கன்ரர் நினைவுப் பூங்காவில் இம்மரநடுகை நிகழ்வு இடம்பெற உள்ளது. தாம் வாழும் குமுகத்திற்குத் தம் பங்களிப்பைக் கடமையாகக் கருதும் பண்பாடு கொண்ட தமிழர் றூச் பகுதியின் பசுமை, பல மரபுவழிகள் தாண்டியும் நிலைத்திட வேண்டி கனடியத் தமிழர் பேரவையோடு இணைந்து இம்முயற்சியைத் தொடர்கின்றனர்.

தாயகத்தில் போரினாலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் தாம் பறிகொடுத்த உறவுகளின் நினைவாகவும் இம்மர நடுகை நிகழ்வு பார்க்கப்படுகிறது.

இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் மரநடுகை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்லாது தமிழர் வாழ்விலே மரபு முறையில் மரங்கள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. நிகழ்வுகளைக் குறியிடவும் நினைவுகளை சுமந்து செல்லவும் மரங்களை நடுவதும் அது எதிர்காலத்தில் வரும் தம் மரபு வழிகளுக்கு பயனளிப்பதும் வழக்கமாகும்.

றூச் தேசியப் பூங்காவிலே வாழ்தலுக்கு மிகச் சிறந்த சூழல் அமைக்கும் இவ் அரிய வாய்ப்பை தவற விடாது நாளை, பாப் கன்ரர் நினைவுப் பூங்கா 7277, 14ஆம் அவனியு, மார்க்கம். காலை 9:00 தொடக்கம் மாலை 2:00 வரை அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.




மன்னார் ஊடகவியலாளருக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரிக்கை

Posted: 04 May 2012 08:52 AM PDT


ஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்க, நேற்று மன்னார் திருக்கேதிஸ்வர பகுதிக்கு சென்றவேளை, அங்கு வந்த மன்னார் ஊடகவியலாளர் இருவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் ஆலோசகரான ரஜீவ விஜேசிங்க,மன்னார் ஊடகவியலாளர் இருவரைக் கண்டு விரக்தி அடைத்துள்ளார்.

குறித்த இரண்டு ஊடகவியலாளர்களையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததோடு பௌத்த தர்மத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

அதன்பின் நீண்ட நேரம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டதன் பின் குறித்த ஊடகவியலாளர்கள் விடப்பட்டனர். குறித்த சம்பவத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் காத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெளத்தர்கள் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் நடக்க கூடாது: ஜனாதிபதி

Posted: 04 May 2012 08:50 AM PDT


நாடு என்ற ரீதியில் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய உரிமை காணப்படுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும். பொறுமையின் காரணமாகவே ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறுடைய பல்வேறு விடயங்களை உருவாக்க முடிந்தது. குரோத உணர்வுகளை தூண்டும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.

புத்திசாதூரியமாகவும், பொறுமையுடனும் செயற்படுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு, பால் மாவின் விலை உயர்வு! சீமேந்தின் விலையும் அதிகரிப்பு

Posted: 04 May 2012 08:49 AM PDT


சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான விலைகளை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.


இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கான இறக்குமதி வரியை நேற்று அரசாங்கம் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 163 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மாவின் விலை 63 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயுவிற்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்தின் விலை 70 ரூபாவால் அதிகரிப்பு

இலங்கையில் சீமெந்து 50 கிலோ மூடை ஒன்றின் விலை 70 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளது.

சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருடன் மன்மோகன் சிங் சந்திப்பு

Posted: 04 May 2012 08:48 AM PDT


அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துள்ளனர்.


கடந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த குறித்த குழு தமிழ் மக்கள் நிலைமை குறித்தும் இந்திய அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும், வேலைத்திட்டங்கள் தொடர்பில் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். 

அவர்களின் அந்தப் பயணம் குறித்து விளக்கமளிப்பதற்காக, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை, குறித்த குழுவினர் சந்தித்துள்ளனர்.

அதன்போது இலங்கையில் பார்வையிட்ட வேலைத் திட்டங்கள், தமிழ் மக்களினது நிலை, மற்றும் அரசியல்வாதிகளுடனான சந்திப்பு என்பவை பற்றி விளக்கமளிக்கவுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீண்டும் அவர்களது, சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் குறித்த பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற்ற பட வேண்டும் எனவும் அக்குழு இலங்கை அரசையும் இந்திய அரசையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் அறிக்கை தாக்கல்!

இலங்கை சென்று திரும்பிய அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து அறிக்கை அளித்தனர்.

இக்குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தாங்கள் இலங்கை விஜயத்தின் போது சேகரித்த விவரங்களை அறிக்கையாக கொடுத்தனர்.

பிரதமருடனான சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா சுவராஜ்,

ஒன்றுபட்ட இலங்கைக்குள் கண்ணியமான உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களிடம் கூறியதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசியல் தீர்வுக்கான அந்நாட்டு நாடாளுமன்ற குழுவுடன் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண வேண்டிய பொறுப்பு ராஜபக்சவுக்கு இருக்கிறது என்றும் பிரதமரிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சுஷ்மா கூறினார்.

குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடம் இலங்கைப் பயணம் பற்றிய கருத்தை மன்மோகன் சிங் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் மத்திய இணை அமைச்ச வி. நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமருடனான சந்திப்புப் பெற்ற செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், இருதரப்பு உறவுகளுக்கும் இடையே சிக்கலான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயணம் இது என்று பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார் தாகூர்.

கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்!-ஹக்கீமிடம் சுமந்திரன் கோரிக்கை

Posted: 04 May 2012 08:47 AM PDT


தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை வலியுறுத்துவதைவிட இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதலில் அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அச்சந்திப்பின்போது சுமந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாம் ஒருபோதும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பங்குபெற மாட்டோம் என அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது, அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவோம்.

நாங்கள் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றாது என பிழையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெரிவுக்குழு அமைப்பது தொடர்பாக அரச அமைச்சர்கள் பேசி வருகின்ற போதிலும் இது தொடர்பில் ஆதரவு பெரியளவில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை வலியுறுத்துவதை விடுத்து, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு முதலில் அரசாங்கத்தை வருமாறு வலியுறுத்த வேண்டும்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வது குறித்து சிந்திக்கப் போவதில்லை எனவும் சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

10 ரூபா, 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படமாட்டா!- மத்திய வங்கி ஆளுநர்

Posted: 04 May 2012 08:46 AM PDT


10 ரூபா மற்றும் 2,000 ரூபா நாணயத்தாள்கள் இனிமேல் அச்சடிக்கப்படமாட்டாதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.


10 ரூபா நாணயக்குற்றியொன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் நாம் 10 ரூபா தாள் வெளியிடமாட்டோம். பதிலாக குற்றி நாணயத்தையே வெளியிடுவோம்.

இருப்பினும் 2,000 ரூபா தாளையும் இனிமேல் அச்சடிக்க மாட்டோம்.

நாம் ஏற்கெனவே 20 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 500 ரூபா, 1,000 ரூபா, 5,000 ரூபா தாள்களை வெளியிட்டுள்ளபடியால் 2,000 ரூபா தாளுக்கான தேவையில்லை' எனவும் அவர் கூறினார்.

2010 ல் 136.6 மில்லியன் அழுக்கடைந்த நாணயத்தாள்களையும் 2011 இல் 137 மில்லியன் தாள்களையும் மத்திய வங்கி சுழற்சியிலிருந்து அகற்றியுள்ளது.

இவ்வாறு மீளப்பெறும் தாள்களுக்கு பதிலாக காலத்துக்காலம் புதிய தாள்கள் வெளியிடப்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.

உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நாளில் உள்ளத்தில் உள்ளவற்றை உரத்துச் சொல்லுவோம்

Posted: 04 May 2012 08:45 AM PDT


உலக ஊடகச் சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில் எமது உள்ளத்தில் உள்ளவற்றை உரத்துச் சொல்லுங்கள் என்று வேண்டுகின்றோம்.


பேசக் கூடியவற்றை வெளியில் பேசி சினேகபூர்வமான முறையில் சிக்கல்களுக்கு தீர்வைக் கண்டு எமது பயணம் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், அந்தப் பயணத்தின் மூலம் அதிக பலன் பெற்று சமூகத்திற்கும் நாம் வாழும் நாடுகளுக்கும் இசைந்தவர்களாக வாழுவோம் என்ற வேண்டுகோளை விடுக்கின்றோம்.

அதே போல் எங்கள் பக்கத்தில், உள்ளத்தில் எழுந்தவற்றை உங்கள் அனைவருக்கும் உரத்துச் சொல்லியபடி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு எமது எழுத்துக்கள் இந்தப் பக்கத்தில் வந்து விழுகின்றன.

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜிம் கரிஜியானிஸ் அவர்கள் உலக ஊடக சுதந்திர தினம் தொடர்பாக தெளிவான செய்தியொன்றை தந்துள்ளார்.

மேற்படி செய்தியில், உலகநாடுகளில் 2012ம் ஆண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 21 என்றும் 2011 ம் ஆண்டில் கொல்ல்ப்பட்டவர்கள் 103 என்றும் யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன் ஞாபகார்த்த நினைவு நாள் பல தமிழ் அரசியல் தலைவர்களின் பிரசன்னத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

கொழும்பிலும் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகையாளர் கூடியிருந்து ஊடகச் சுதந்திரம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இலங்கையில் ஆட்சி இயந்திரத்தால் அரைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நமது ஊடகங்களை நன்கு மதிக்கின்றார்கள். அவற்றின் தேவை நமது மக்களுக்கு நிறையவே உள்ளது என்பதை நாம் அவதானிப்பின் மூலம் கண்டுகொள்ளலாம்.

இவ்வாறாக தமிழ் ஊடகங்களின் ஆதிக்கமும் அவசியமும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழுகின்ற மேற்குலக நாடுகளிலும் பெருகியுள்ளதைக் கண்டு ஊடகவியல் சார்ந்த நிறுவனம் என்ற வகையில் நாம் பெருமையும் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை என்பது மிகவும் கரடு முரடானது என்பதையும் பல இடையூறுகளைக் நமக்குத் தந்தவை என்பதையும் நாம் உணர்கின்றோம். 2009ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த நமது மக்களினதும் போராளிகளினதும் இருப்பு அதற்கப்பால் நகர்வதற்கு இடமில்லாத காரணத்தால், வேறு பக்கமாக திசை மாறிச் சென்றது.

அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக போராடிய அந்த இனத்தின் முளைகள், இடைவிடாது பெய்த போர் மழையினால் முற்றாக நனைந்து கரைந்து போயின. முள்ளிவாய்க்காலில் இழந்து நின்ற நம்பிக்கைகளை மீண்டும் துளிர்விடும் பணியைத் தொடர புலம்பெயர் தமிழர் சமூகம் தயாராக உள்ளது என்ற நம்பிக்கைகள் தோன்றி நின்றன.

நமது வெற்றிகளுக்கு நமது மக்கள் எந்தளவிற்கு துணை நின்றார்களோ அந்த அளவிற்கு தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களும் கைகோர்த்து நின்றன. தோல்விகளை நமது இனம் எதிர்கொண்டபோதும், இழப்புக்களை கண்டபோதும் துன்பப்பகிர்வில் துணிவோடு நின்றன பல தமிழ் ஊடகங்கள்.

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர், நமது தமிழ்த் தேசிய உணர்வுகள் தொடர்பான பணியிலிருந்து நமது தாயக உறவுகள் விலகிக் கொண்டார்கள். தங்களைச் சுற்றி அந்நியர்களின் துப்பாக்கிகள் குறி வைத்து நிற்க, கூனியும் குறுகியும் போயினர் நமது உறவுகள். போர்க்கருவிகளை தாங்கியபடி விடுதலை வேட்கையோடு மண்ணைக் காத்தவர்கள் தடுப்பு முகாம்களின் உள்ளே இருந்து வாழ்வையும் நம்பிக்கைகளையும் தொலைத்தவர்களாகவே..

புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அரசியல் பயணம் எந்த வடிவத்திலாவது தொடரவேண்டும் என்ற உண்மை நிச்சயமாகவே தெரிந்தது. ஆனால் காலம் செல்ல உள்ளக முரண்பாடுகள் பல தோன்றி அட்டகாசம் செய்தன. இவ்வாறான விரும்பத்தகாத செயல்களினால் இங்குள்ள ஊடகங்களும் பாதிக்கப்பட்டன. தெளிவற்ற முறையில் விவாதங்கள் நடந்தன. நம்பிக்கைகள் இல்லாத விடயங்களில் ஈடுபட்டு நேரம் வீணடிக்கப்பட்டது.

நமது இனம் சார்ந்த அரசியல் என்பது, முன்னர் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்கள் பக்கம் மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால் 2009ம் ஆண்டுக்கு பின்னர் அனைத்தும் சிதறிப்போயின. சிதறிக்கிடக்கும் அரசியல் மூலமாக எதை நமது மக்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியாமல் உள்ளது. தமிழ் மக்களது பலத்தை நிர்வகிக்கக் கூடிய அமைப்புக்கள் கூட தங்கள் நகர்வுகளில் தெளிவற்று நின்றன.

அவ்வாறான உண்மைகள் இவ்வாண்டு நன்கு கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் என்பது மதங்களைத் தாண்டிய பாதையில் செல்ல வேண்டியது என்பதை தெரிந்து கொண்டும். அதற்கு மாறான மதங்கள் தொடர்பான நிகழ்வுகள் அரசியலோடு இணைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படும் நகைப்பிற்கிடமான அறிவிப்புக்களை கனடாவில் நாம் பார்க்கின்றோம்.

இலங்கை அரசிற்கு எதிரான தண்டனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை கூடி ஆராய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மறுபக்கத்தில் நமது சிறிய விடயங்களுக்காக நேரங்களை செலவு செய்து சந்திப்புக்களை நடத்துகின்றோம்.

உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பது என்று எண்ணிய வண்ணம் இன்னும் அந்த இடைவெளி பெரிதாகும் தன்மைளை நாம் அவதானிக்க தவறுகின்றோம். இவற்றை நாம் உற்று நோக்கும் போது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூற முடியாமல் உள்ளது.

ஊடகச் சுதந்திரம் தொடர்பான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றபோது ஒரு ஊடகத்தின் உள்ளக் கருத்துக்களை ஒரு தடவை அமைதியாக இருந்து கேளுங்கள் என்று நாம் இவ்வாரம் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மட்டு. விபுலானந்தா அழகியற் கற்கைகள் நுண்கலை பீடத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 May 2012 08:43 AM PDT

விபுலானந்தா அழகியற் கற்கைகள் நுண்கலை பீடத்தின் மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்புக்களை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமது நலனில் அக்கறையின் செயற்பட்டுவரும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் மற்றும் சிரேஷ்ட உதவி நிதியாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே மாணவர்கள் இந்த ஆர்ப்ப்பாட்டத்தை நடத்தினர்.

சிரேஷ்ட உதவி பதிவாளரினால் எந்த விதமான அபிவிருத்தி வேலைகளும் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவில்லை. அத்துடன் மாணவர்களின் நலன்களில் இவர் அக்கறை செலுத்தவில்லை. இதனாலேயே குறித்த உதவி பதிவாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.சிவா தெரிவிக்கையில்,

எமது பல்கலைக்கழகத்தில் சில நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என எட்டு நாட்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக கோரியிருந்தோம். எனினும் நிர்வாகம் எமது கோரிக்கை தொடர்பில் எதுவித அக்கரையும் செலுத்தாத நிலையே காணப்படுகின்றது.

மாணவர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கப்படவேண்டும். எமது பல்கலைக்கழகத்தில் உள்ள சில நிர்வாக அதிகாரிகளின் செயற்பாடுகள் எங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை. அவர்களை இடமாற்றம் செய்து எங்களுக்கு சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் விடுத்த கோரிக்கைகள் பேச்சளவில் மட்டுமே உள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் பிரச்சினை, கல்விசாரா பிரச்சினைகள் தொடர்பில் நிர்வாகத்தின் கவனத்துக்கு பல்வேறு தடவைகள் கொண்டுசென்றும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே நாங்கள் இந்த நிர்வாக மாற்றத்தை கோரியுள்ளோம். எங்களின் பிரச்சினைகளை கேட்டு எங்களுக்கு தீர்வை பெற்றுத்தரக்கூடிய நிர்வாகமே எமக்கு தேவை. இன்று பல்கலைக்கழகம் நிர்வாகத்துக்குரிய பல்கலைக்கழகமாகவே உள்ளது. மாணவர்களுக்கான பல்கலைக்கழகமாகவில்லை.

நாங்கள் எமது கோரிக்கையினை தெரிவிக்கும்போது சில நிர்வாகத்தில் உள்ளவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். அவர்கள் மாணவர்கள் கோரிக்கையை முன்வைக்கும்போது அவர்களுக்கு வகுப்பு தடை விதிப்போம் என்று மிரட்டுகின்றனர்.

இவ்வாறு மிரட்டுபவர்கள் எவ்வாறு மாணவர்களின் பிரச்சினையை, வேண்டுகோளை நிறைவுசெய்வர். இவ்வாறானவர்கள் மாணவர்கள் மத்தியில் பிளவையும் ஏற்படுத்த முனைகின்றனர் என்றார்.

இவ்வாறானவர்கள் எவ்வாறு மாணவர்களின் பிரச்சினையை தீர்க்கப் போகின்றார்கள்.

இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜாவை தொடர்புகொண்டு வினவியபோது,

பல்கலைக்கழக வேலை நிமித்தம் தற்போது கொழும்பில் தங்கியுள்ளேன். மட்டக்களப்பு திரும்பியவுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் மாணவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். இது தொடர்பாக இன்று காலை மாணவர்களுடன் கலந்துரையாடினேன் என்றார்.

இதேவேளை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமாரை தொடர்புகொண்டு இந்த தொடபில் வினவிய போது,

கூட்டமொன்றுக்காக கொழும்பில் தங்கியுள்ளேன். இம்மாணவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றேன். இந்நிலையத்தின் பணிப்பாளராக நான் பதவியேற்று ஒருவாரமே கடந்துள்ளன. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்றார். 

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் கடந்த மாதம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணிப்பாளர் இடமாற்றப்பட்டு புதிய பணிப்பாளராக கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதில் உப வேந்தர் கலாநிதி பிரேம்குமார் அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.