Tamilosaii

Tamilosaii


டக்ளஸ் மேற்கொண்ட இரகசிய ஏற்பாட்டு கபட நாடகம்! இந்திய குழுவின் நல்லூர் தரிசனம் ரத்து

Posted: 19 Apr 2012 09:47 AM PDT

அமைச்சர் டக்ளஸின் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டினால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நல்லூர் ஆலயத்திற்கான விஜயத்தை திடீரென தடைசெய்துடன், அடுத்த கட்ட நிகழ்வுக்களில் கலந்து கொண்டுள்ளனர்.

இருநாள் விஜயமாக நேற்று யாழ்ப்பாணத்திற்கு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வந்திருந்தது.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை நல்லூர் ஆலயத்திற்கு தரிசனத்திற்காகச் செல்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து நல்லூர் ஆலய முன்றலில் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மீனவ சங்களையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அமைச்சர் டக்ளஸ் இரகசிய ஏற்பாடொன்றை மேற்கொண்டிருந்துள்ளார்.

இந்த விடயம் எப்படியோ இந்திய தூதரகத்தின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து தூதரகத்தின் திடீர் நடவடிக்கையின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நல்லூரிற்குச் செல்லும் திட்டம் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, இந்திய குழு யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றில் மாகாண அதிகாரிகளுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது.

எனினும் அங்கும் அழையா விருந்தாளியாக, தான் அழைத்து வந்த மீனவர்களுடன் சென்ற அமைச்சர், அந்தக் கூட்டத்தின் நிறைவில், மீனவர்களுடைய மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்க வைத்துள்ளார்.

எனினும் இதன்போது அமைச்சர் அங்கு இல்லாமல் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்பதுபோல காட்டிக்கொண்டார்.

எனினும் மீனவர்கள் வந்த பேரூந்து அமைச்சருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! விகடன் மேடையில் பழ.நெடுமாறன்

Posted: 19 Apr 2012 09:46 AM PDT

மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன்.  தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார்.

கேள்வி:  இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?

பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக் கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார். சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.

1989 ஜூலை 24-ம் தேதி ‘தி இந்து' நாளேட்டில், ‘விடுதலைப்புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்தர் பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்' என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகுவிரைவிலேயே உணர்த்தியது.

2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித்தார் தம்பி.

2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது.

அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள். ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின்றனர்.

ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். எனது சொந்த விருப்பத்தில் இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!

கேள்வி:  இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?

பதில்: அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசுகள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது.

இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும். அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

வெளியுறவு, இராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்.

மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!

கேள்வி:   உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர்கள்?

பதில்: உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக்கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை. அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு.

ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண்பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக்கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது. எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வை இழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!

 

இங்கிலாந்தில் புல்லட் புரூப் உறையுடன் கூடிய ஐபோன்கள்

Posted: 18 Apr 2012 07:26 PM PDT

விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் இனிமேல் புல்லட் புரூப் உறையுடன் வரப் போகிறது. எனவே இனி அதை யாரும் சுட முடியாது.

புகழ்பெற்ற வீடியோ இணைய தளமான யூடியூப்பில் பார்த்தால் தெரியும். விலையுயர்ந்த தனது ஆப்பிள் ஐபோனை ஒருவர் சமீபத்தில் கைத்துப்பாக்கியால் சரமாரியாக பல கோணங்களில் இருந்து சுட்டுத் தள்ளிய காட்சி வெளியானது.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய ஐபோன் எவ்வளவுதான் பாதுகாப்பானது, சுட்டால் அதற்கு எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்று பார்க்கவே கண்டபடி சுட்டுத் தள்ளியதாக அதன் உரிமையாளர் கூறியிருந்தார்.

இதை கவுரவ குறைச்சலாக எடுத்துக் கொண்டு விட்டது ஆப்பிள் நிறுவனம். இனி துப்பாக்கியால் சுட்டாலும் உடைந்து சிதறாத ஐபோன் தயாரிக்க அது முடிவு செய்து விட்டதாக லண்டனில் வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புல்லட் புரூப் உறைக்கு கூடுதல் விலை வைக்கப் போவதில்லை என்றும் ஆப்பிள் கூறி விட்டதாம். வழக்கமான ஐபோன் மீது ஒரு அங்குல உயர ஸ்டீல் தகடு பதித்ததாக உறை இருக்கும். அதன் மீது 0.50 கேலிபர் ரக துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு பட்டு தெறிக்குமே தவிர போனை துளைக்காது.

இந்த புல்லட் புரூப் தவிர இனி ஐபோன் வாங்குவோருக்கு மாதிரி குண்டு ஒன்றையும் போனசாக அளிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

எனினும் ஐபோனின் பின்பகுதியில் கமெராவுக்கான ஒரு இடம் மட்டும் மூடப்படாமல் விடப்படும். அதை குறி வைத்து சுட்டால் ஐபோனின் கதி அதோகதிதான் என்கிறது அந்த செய்தி.

 

சைப்பிரஸில் இலங்கைப் பெண்ணைக் கடத்திச்சென்று கற்பழிப்பு!

Posted: 18 Apr 2012 07:09 PM PDT

இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார்.

பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தன்னை ஒரு ஆளில்லா இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார்.

சைப்பிரஸின் அத்தலஸ்ஸா பூங்கா பகுதியில் வைத்து குறித்த இலங்கைப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிமாசோல் எவனியூ பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணின் உடலில் வெட்டுக் காயங்களும் எரி காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்ட காரின், உரிமையாளரை (22 வயது) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.