சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


இதயத்திற்கு இதம் தரும் சாக்லேட்: ஆய்வில் தகவல்

Posted: 24 Apr 2012 09:08 AM PDT

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சாக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவினை வெளியிட்டவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான்.

தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.

இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவீதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவீதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பை தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்று தெரிந்தது.

முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெசர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயை தடுக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால்தானோ காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

அட்சய திரிதியை நாளில் குபேர வழிபாடு

Posted: 24 Apr 2012 09:01 AM PDT

அட்சய திரிதியை நாளை ஒட்டி சென்னை வண்டலூர் அருகில் உள்ள ரத்னமங்கலம் குபேரர் கோவிலில் லட்சுமி குபேரர் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர். 

அட்சய திரிதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. இன்றைய தினம் நாம் செய்யும் நற்காரியங்கள் மேன் மேலும் வளரும் என்பது ஐதீகம். சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் அட்சய திரிதியை நாளாகும். இதன் சிறப்புகள் பற்றி பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அட்சய திரிதியை சிறப்பு

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தான் இழந்த சங்க நிதி, பதும நிதிகளை பெற்றது அட்சய திரிதியை நாளில்தான். பாண்டவர்கள் வன வாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில்தான். அதேபோல் மணிமேகலையும் இந்த நாளில்தான் அட்சய பாத்திரம் பெற்றுள்ளார். அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனரான சிவபெருமான் தன் கையில் இருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் இருந்து உணவு பெற்று பிரமகத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாள்தான்.

கனகதாரா ஸ்தோத்திரம்

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்த நாளும் அட்சய திரிதியை நாள்தான்.

கிருஷ்ணா அவதாரத்தில் குசேலர் அளித்த அவலை சாப்பிட்டு அவரை செல்வத்திற்கு அதிபதியாக உயர்த்திய நாளும் இந்த நாள்தான்.

குபேரன் மகிமை

செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும்.

குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படையும் என்பது நம்பிக்கை. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

வெளிநாடுகளில் குபேரன்

இந்தியாவைப் போல ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் குபேரனை ' சிரிக்கும் கடவுளாக' வணங்குகின்றனர். புத்த மதத்திலும் குபேர வழிபாடு உள்ளதால் சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர். மதங்கள் வேறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். குபேரரைப் போல குள்ளமான உருவம், தொப்பை, கையில் கலசம், பொன்முட்டை ஆபரணங்கள் என சிரிக்கும் புத்தருக்கும் உள்ளது.

அட்சய திரிதியை அன்று குபேர அம்சத்தை வணங்கினால் வேண்டிய அளவிற்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே அன்றைக்கு குபேரரை வழிபடுவதைப் போல ஏழைகளுக்கு இயன்ற அளவிற்கு தானம் செய்யுங்கள் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்வே திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது - நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர

Posted: 24 Apr 2012 09:00 AM PDT

3 வது நார்வே தமிழ் திரைப்பட விழா மற்றும் தமிழர் விருது 2012 நிகழ்வுகள் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் வரும் 29-ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நேரடியாகப் பங்கேற்க மயக்கம் என்ன, ஒஸ்தி புகழ் நாயகி ரிச்சா கங்கோபாத்யாய், புரட்சித் தளபதி விஷால், இயக்குநர்கள் சற்குணம், கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, கேசவன் உள்பட பல திரையுலகக் கலைஞர்கள் நார்வே செல்கின்றனர்.

24 ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை பத்து தமிழ் திரைப்படங்கள் Ringen திரையரங்கில் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகின்றன. இதற்கான நுழைவுச் சீட்டுகளை www.filmweb.no இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Stovner இல் உள்ள Nedre Fossum Gård - Kultur Salen இல் இருபது குறும்படங்கள் 25, 26 ஆம் தேதிகளில் இலவசமாக திரையிடப்படுகின்றன. இதற்கு நுழைவுச் சீட்டு இலவசம்!

நிறைவு நாளான 29 தேதி தமிழர் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. அன்றைக்கு பார்வையாளர் செவிகளுக்கு இன்னிசை விருந்து வழங்க பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே) , பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" - இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

தூங்கா நகரம் - சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு

கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

சுபாஷ் கலியன் இயக்கத்தில் "பாலம் கல்யாணசுந்தரம்" அய்யா அவர்களின் ஆவணப்படமும் இந்த விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தெரிவாகி உள்ளது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிக்கான 15 முழு நீள தமிழ் திரைப்படங்களை, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே சமீபத்தில்தான் விழாக்குழுவினர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50-க்கும் அதிகமாக படங்கள் இந்தப் போட்டிக்குக் குவிந்தன. 

நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழு பார்த்து தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நார்வே திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா... சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.

தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் - நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் வசீகரன் சிவலிங்கம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

பொரள்ளையில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்தமைக்கு உதுல் பிரேமரத்ன கைது செய்யப்படலாம்

Posted: 24 Apr 2012 08:06 AM PDT


சட்டத்தரணி உந்துல் பிரேமரட்னவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு அழைப்பாணை விடுக்குமாறு கோரி பொரள்ள காவல்துறையினர் நிதிமன்றில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க, தேவையேற்படின் காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என அறிவித்தார்.

பொரள்ள ரி20 தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து முன்னெடுத்ததாகவே உந்துல் பிரேமரட்ன மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்த காவல்துறையினர், உந்துல் பிரேமரட்ன சட்டவிரோதமான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துவாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையுறு விளைவித்தாகவும், தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காவல்துறையினரின் பணிகளுக்கு இடையுறு விளைவிக்கப்பட்டதாகவும், குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆர்ப்பாட்டத்தின் போது பெறப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்படாத காட்சிகளை ஊடக நிறுவனங்களிடம் பெற்றுத் தருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் ஊடகநிறுவனங்களுக்கு குறித்த காணொளிகளை பெற்றுத் தருமாறு உத்தரவிட்டார்.

ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் அத்துமீறி குடியேறும் சிங்கள குடும்பங்கள்

Posted: 24 Apr 2012 08:04 AM PDT


முல்லைத்தீவு கொக்கிளாயில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26ஆம் திகதி மேலும் 110 வரையான சிங்கள குடும்பங்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.


கடந்த சனிக்கிழமையன்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்த ஆளுநரிடம் சிங்கள மக்கள் தமக்கான காணி மற்றும் வீடுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதற்கமைய, அத்துமீறி தமிழர் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அந்தப் பகுதிகளிலேயே நிரந்தரமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, ஏற்கனவே சுமார் 87 வரையான குடும்பங்கள் நிரந்தர பதிவுகள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான இதர வசதிகளுடன் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர். இதற்கென சுமார் 100 ஏக்கர் வரையான நிலம் அபகரிக்கப்படவுள்ளது.

இதற்காக தமிழர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் ஆளுநர் சிங்கள மக்களிடம் தெரிவித்திருக்கின்றார். மேலும் இந்த விஜயத்தின்போது எந்த விதமான அறிவித்தல்களையும் வழங்காமல் ஆளுநர் திடீரென சென்றிருந்தார்.

இதேவேளை இந்தப் பகுதியில் ஏற்கனவே தமிழருக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் நிலம் சிங்களவர்களால் இராணுவத்தினரின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பௌத்த விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன: சோபித தேரர்

Posted: 24 Apr 2012 08:02 AM PDT


சிங்கள பௌத்த விரோத கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


வரலாற்று சிறப்பு மிக்க தம்புள்ள பிரதேசத்தில் வேற்று மத வழிபாட்டுத் தளம் அமைக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னர் எழுந்த சர்ச்சைகள் தொடர்பில் ஒமல்பே சோபித தேரர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரே இவ்வாறு சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுக்குள் பௌத்த விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன.

இவ்விரோத செயற்பாடுகளுக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் மன்னாரில் கைது

Posted: 24 Apr 2012 08:00 AM PDT


மன்னாரில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடற்படை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து பிரதேசத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர், எழுதூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து கேரள கஞ்சா ஒன்பது கிலோ கிராம் மற்றும் 890 கிராம் எடையுடைய விஷ போதைப் பொருள் வகையொன்றென சந்தேகிக்கப்படும் ஹெரோயின் வகைப் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய சீமான் கோரிக்கை

Posted: 24 Apr 2012 07:59 AM PDT


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுள்ளது என்கிற செய்தி வரு்த்தத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

போரின்போது இலங்கைக்கு மண்ணெண்ணை கடத்தினார்கள், மருந்து கடத்தினார்கள், காயம்பட்டவர்களைக் காப்பாற்ற குருதி கடத்தினார்கள் என்பது போன்ற குற்றச்சாற்றுகளின் அடிப்படையிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஐயத்திலுமே இவர்கள் பல ஆண்டுகளாக செங்கல்பட்டிலுள்ள சிறையில், சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக தமிழக காவல் துறையினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இதில் சிலர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்குப் பிறகும் ஐயத்தின் பேரில் அவர்களை தடுத்து வைத்துள்ளது தமிழக காவல் துறை. இது எப்படி நியாயமாகும், சட்டப்பூர்வமான செயலாகும்?

இதுதவிர, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெறக்கூட தமிழக காவல்துறையின் கியூ பிரிவு அனுமதிக்க மறுக்கிறது.

தங்களை விடுவிக்கக்கோரி ஒவ்வொரு முறையும் இவர்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தும்போது அவர்களோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலை செய்வது தொடர்பாக அரசுடன் பேசி முடிவெடுக்கிறோம் என்றுதான் உறுதியளிக்கிறது.

அவர்களின் உறுதிமொழியை ஏற்று இவர்கள் பட்டிணிப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அரசு நிர்வாகத்தின் இப்படிப்பட்ட பொறுப்பற்ற போக்குதான் இப்போது நடைபெற்றுவரும் பட்டிணிப் போராட்டத்திற்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், ஈழத் தமிழர்கள் தொடர்பாக காவல்துறையினரின் பார்வையிலும், அணுகுமுறையிலும் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தாங்கள் வாழ்ந்த நாட்டில் உரிமை மறுக்கப்பட்டு, உயிர் பறிக்கப்படும் நிலையில் இங்கு ஓடி வந்த நம் சொந்தங்களை, நம்மால் தேர்வு செய்யப்பட்ட அரசின் காவல் துறை இப்படி சித்ரவதைக்கு உள்ளாக்குவது வேதனையைத் தருகிறது.

ஈழ மண்ணில் கொடுமை என்று இங்கு ஓடி வந்தால், தாய்த் தமிழ் மண்ணில் அதையும் விட கொடுமையான நிலை. எங்குதான் போவான் ஈழத் தமிழன்?

எனவே தமிழக அரசு இந்த மக்களின் நிலையை நியாயமான பார்வையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழக காவல் துறையின் கியூ பிரிவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானதுதானா என்பதை ஆராய வேண்டும். தமிழக அரசு நல்ல முடிவை எடுத்து இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டு. அம்பிலாந்துறையில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற மாணவன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Posted: 24 Apr 2012 07:57 AM PDT


மட்டக்களப்பு, அம்பிலாந்துறையில் இருந்து செட்டிபாளையத்தில் உள்ள பாடசாலைக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மாணவன் ஒருவரை சிறிய கன்டரில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு தாழங்குடா காட்டுப் பகுதியில் வீசியெறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்று திங்கட்கிழமை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10 கல்வி பயிலும் அம்பிலாந்துறை, கற்சேனையை சேர்ந்த சின்னத்துரை கோகுலராஜ் என்னும் மாணவன் தனது வீட்டில் இருந்து அம்பிலாந்துறை இயந்திர படகு மூலம் ஆற்றைக்கடந்து குருக்கள்மடம் ஊடாக செட்டிபாளையத்தை நோக்கிச்சென்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகால் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது சிறிய கன்டர் ரக வாகனத்தில் வந்துகொண்டிருந்த சிலர் குறித்த பாடசாலை மாணவனை துவிச்சக்கரவண்டியோடு பிடித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளதுடன் அவரை கடுமையாகவும் தாக்கியுள்ளனர்.

மாணவன் சுயநினைவிழந்த நிலையில் தாழங்குடாவில் உள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்..இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00மணயளவில் சுயநினைவு திரும்பியநிலையில் மீண்டும் தனது இல்லத்துக்கு வந்து நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளதுடன் தற்போது மாணவன் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவனின் பெற்றோரினால் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் அத்தியட்சர், கொக்கட்டிச்சோலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன்.

மாணவர்கள் தங்களது கல்வியை சுதந்திரமாக கொண்டுசெல்ல இவ்வாறன சம்பவங்கள் தடைக்கல்லாக அமையும். எனவே மாணவனை தாக்கியோர் தொடர்பில் விரைவில் நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை குறித்து ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்!

Posted: 24 Apr 2012 07:56 AM PDT


தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பிரதி அமைச்சரின் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானதும் பிழையாக வழிநடத்துவதுவதுமாகும். தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் சேதமாக்கப்பட்டவில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் முழுநாடும் அறிந்தது. பள்ளிவாசல் தேசமாக்கப்பட்டமைக்கு சாட்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் யூ ரியூப் மற்றும் இணையத்தளங்களில் உள்ளன.

இந்நிலையில், பிரதி அமைச்சர் தேவையான விசாரணைகளை மேற்கொள்வதுடன் குறித்த ஆதாரங்களை பார்வையிட்டு தனது அறிக்கையை தெளிவுபடுத்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்த உண்மை நிலையினை வெளிப்படுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தவறும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான நோக்கத்துடன் அவர் செயற்படுகின்றார் என கருதும் நிலைக்கு இச்சமூகம் தள்ளப்படும்.

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனை வழங்க தென்கொரியா இணக்கம்

Posted: 24 Apr 2012 07:55 AM PDT


இலங்கையில் தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து துறை அபிவிருத்திகளின் பொருட்டு, தென்கொரியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.


தெற்காசிய நாடு என்ற அடிப்படையில் இந்த கடன் தொகை எதிர்கால தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தென்கொரிய நிதியமைச்சர் இன்று தகவல்வெளியிட்டுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை அடிப்படையில், தென்கொரிய பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன நிதியத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. குறித்த நிதி பலதரப்பட்ட விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொது சேவை செயற்றி;ட்டங்களில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தென்கொரிய ஜனாதிபதி லீ மயூங் பக் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் தலைநகர் சோலில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதார ஸ்ரத்தன்மை மற்றும் இருதரப்பு கூட்டுறவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நட்பு ரீதியாக இரண்டு யானைக்குட்டிகள் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாகவும் தென்கொரிய ஜனாதிபதி லீ மயூங் பக் தமது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

இதுதவிர, தென்கொரியாவில் பணிபுரியும் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற செயற்குழு குறித்து அரச பணியாளர்களுக்கு தெளிவு படுத்தப்படவுள்ளது

Posted: 24 Apr 2012 07:54 AM PDT


நாடாளுமன்ற செயற்குழு மற்றும் அதன் சட்டத்திட்டங்கள் தொடர்பில் அரச பணியாளர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.


இதன் முதல்கட்டமாக எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சிறப்பு செயற்பட்டறை ஒன்று நடத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த செயற்பட்டறையின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

போதைப் பொருள் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted: 24 Apr 2012 07:48 AM PDT


அண்மையில் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று மையத்தில், போதைப்பொருள் பரிமாற்றம் தொடர்பாக சந்தேகத்தின் கைதுசெய்யப்பட்ட பிரித்தானியருக்கு எதிராக உள்ள சாட்சிகளின் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.


கோட்டை நீதிமன்ற நீதவான் கனிஷ்க விஜேரட்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகத்திற்குரியவர் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியமை தொடர்பில் எந்தவித சாட்சியங்களும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே, அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு பிரித்தானியர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்த தருணத்தில், நீதிபதி சாட்சி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜராகும் போது, குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெற்று மேசையில் அமர்ந்து கருத்துரைக்குமாறு முறையற்றது: திஸ்ஸ அத்தநாயக்க

Posted: 24 Apr 2012 07:47 AM PDT


வடக்கு மக்களின் நெருக்கடி தொடர்பில், அரசாங்கம் உத்தேசித்துள்ள 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாற்பட்ட தீர்வினை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தெரிவுக்குழு ஊடாக வழங்கப்படும் தீர்விற்கு ஐக்கிய தேசிய கட்சி பூரண ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடிப்படை யோசனை ஒன்று இருக்குமாயின் அது பேச்சுவார்த்தைக்கு சிறந்த அடித்தளமாக அமையும்.

13 ஆம் திருத்தம் தொடர்பான கருத்துக்களை தெளிவுபடுத்தினால் இதனை முன்கொண்டு செல்வதற்கு இலகுவாக இருக்கும். தாம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

செயற்படுத்தக் கூடிய பரிந்துரைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுமாயின் அதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த திஸ்ஸ அத்தநாயக்க,

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தக் கூடியவற்றை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வெற்றிடமாகியுள்ள சபையில் உரையாற்றுவதை விடுத்து, அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்று தெளிவுபடுத்தி அந்த விடயங்களை எழுத்துமூலமாக வெளிப்படுத்த வேண்டும்.

அதனை செய்யாது, வெற்று மேசையில் அமர்ந்து விருப்பு, வெறுப்புகளையும், கருத்துக்களையும் கூறுங்கள் என கோருவது முறையற்றது. தீர்வு காணமுனைவது சிறந்தது, ஆனால் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்காக நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்பரப்புக்குள் டக்ளஸ் பிரவேசித்தால் கைது செய்யப்படலாம்: தமிழக சட்டத்தரணி

Posted: 24 Apr 2012 07:45 AM PDT


தமிழகம் இராமேஸ்வரத்தில், தமிழக மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாகவும் எவ்வாறான பிரச்சினை ஏற்பட்டாலும், இந்த ஆர்ப்பாட்டத் தீர்மானத்தில் இருந்து விலகப்போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியக் கடற்பரப்புக்குள் பிரவேசித்தால் எந்தவொரு இந்தியப் பிரஜையும் அவரைத் தடுத்துவைக்க முடியும் என்று சட்டத்தரணி பி. புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் கருத்து தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சட்டத்தரணி பி. புகழேந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐந்தாயிரம் வடமாகாண மீனவர்களுடன் 1000 படகுகளில் சென்று, இராமேஸ்வரத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தும் பட்சத்தில், சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சூலைமேடு கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கில் அவர் கைது செய்யப்படுவார் என தமிழக சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு வன்னியில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராமேஸ்வரம் கடல் வழியாக யுத்தத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்ல முற்பட்ட போது பழநெடுமாறன் உட்பட பலர் கைது செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஐ.நாவில் ‘ஆப்பு‘ வைக்கிறது ஏசிஎவ்

Posted: 24 Apr 2012 07:44 AM PDT


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ் எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ஸ்பீக் எனப்படும் மனிதஉரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன.


2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 ஏசிஎவ் பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது.

மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கை அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவோ, சட்டத்தின் முன் நிறுத்தவோ இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் கூறவுள்ளது.

நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில் உள்ள குறைபாடுகள் என்பனவற்றை இலங்கை தரப்பில் உள்ள தவறுகளாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டவுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் மதிப்பு

Posted: 24 Apr 2012 07:41 AM PDT


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இதன்காரணமாக இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.

இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள இலங்கை நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.

ஏற்கனவே, கடந்த மார்ச் 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணய மதிப்பு 131.60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன்பின்னர், சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்ட போதும், கடந்த இருவாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டுவருகிறது.

யாழ்.வடமராட்சியில் பட்டப்பகலில் ஒருவர் அடித்துக்கொலை இனந்தெரியாதவர்கள் அட்டகாசம்

Posted: 24 Apr 2012 07:40 AM PDT


யாழ்.வடமராட்சிப் பகுதியில் பட்டப்பகலில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் இனத் தெரியாதவர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.


இச்சம்பமவ் இன்று மதியம் 1.30 மணியளவில் வடமராட்சி வதிரிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனம் தெரியாதவர்களே இவ்விளைஞரை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது உடைமைகள் யாவும் வீதியில் சிதறிக்கிடப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் எவையும் உடனடியாக எமக்கு கிடைக்கப்பெறவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வடமராட்சியில் தற்போதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

வடமராட்சியில் அடித்துக்கொலை செய்யப்பட்டவர் தொண்டமானாற்றுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளங் காணப்பட்டதோடு இச்சம்பம் இராணுவ காவலரணுக்கு அருகிலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று மதியம் வதிரிச் சந்தியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டபோதே இது தெரியவந்துள்ளது.

தொண்டமனாறு கோவில் வீதியைச் சேர்ந்த சிவஞானம் சிவறூபன் (வயது 28) என்றவரே இச்சம்பவத்தில் இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரை கறுப்பு நிறமோட்டார் சைக்களில் வந்த முகமூடியணிந்த இருவர்கொண்ட குழுவினரே வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் பகுதியில் இராணுவக் காவலரண் ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தை அரசாங்கம் பாதுகாக்கும்!- தம்புள்ளை விவகாரம் தொடர்பாக பிரதமர்!

Posted: 24 Apr 2012 07:38 AM PDT


வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.


இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றுக்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கலகெதர பிரதேசத்தில் நடைபெற்ற வைவபம் ஒன்றில் கலந்துகொண்டே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக நான் விசாரித்துப் பார்த்தேன். தம்புள்ளை பிரதேசத்திற்கு வரும் முஸ்லிம் வியாபாரிகள் தமது சமயக் கிரியைகளை மேற்கொள்வதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலான இது சுமார் அறுபது வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டதாகும்.

இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக எனக்கு எவ்வித தகவல்களையும் எவரும் வழங்கவில்லை. ஆனாலும் சென்ற தினங்களில் பல ஊடகங்களில் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக பல அறிக்கைகள் விடப்பட்டன. அதற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினைக் கூட பிரதேசவாசிகள் நடத்தியிருந்தார்கள்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது. ஆனாலும் ஏனைய மதங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு அகௌரவப்படுத்துவதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை.

நாம் இன, மத மற்றும் கலாசார ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. எப்படியிருப்பினும் தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலினை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு தற்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன மற்றும் மத ரீதியாகக் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் வகையில் நாம் தீர்மானங்களை எடுக்கக் கூடாது. இனம், மதங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இன்று நடைபெறும் இந்த வைபவம் பௌத்த விஹாரையொன்றில் நடைபெற்றாலும் இதற்காக இந்தப் பிரதேசத்தில் வாழும் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் பிரதேசத்தில் நிலவும் சமய ரீதியான ஒற்றுமை முழுநாட்டுக்கும் முன்மாதிரியாக உள்ளது என்றார்.

பசியுள்ள ஓநாய்களுக்கு பௌர்ணமி நிலவாக தமிழக அரசியல்வாதிகளுக்கு "தமிழ் ஈழம்''!- ஓநாய் இந்து நாளிதழ்

Posted: 24 Apr 2012 07:37 AM PDT


பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்"ஈழம்'' இருக்கின்றது என்று இலங்கைக்கு ஆதரவான இந்து பத்திரிகை சாடியுள்ளது.


ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

"பிரச்சினையின் ஓர் அங்கம்' என்று மகுடமிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப்பத்திரிகை திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அவர்கள் உரத்து ஊளையிடுவது தொலைவிலுள்ள ஈழக்கனவுக்கான அழுகை அல்ல. ஆனால் இங்கு இப்போதுள்ள அரசியலின் அவசரத்தளமாக இருப்பதன் அறிகுறியாக காணப்படுகிறது.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தனிநாட்டை உருவாக்குவதற்கான அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்தார்.

மொன்ரனிகிரோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ போன்ற நாடுகளை அடியொற்றியதாக தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பு கருணாநிதியால் விடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய இணக்கப்பாட்டை எட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு அப்பால் வெகு தொலைவிற்கு விலகிச் சென்று இந்த உணர்வுபூர்வமான விடயத்தை தமிழ்நாட்டில் அரசியல் மயப்படுத்துவதற்கு மேலும் கருணாநிதி தீனி போடுவதாக தென்படுகிறது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வை ஒரு கருவியாக மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மிகவும் நியாயமான வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஜெனீவாவில் அண்மையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தமானது சிறிய அளவினதானதொன்று அல்ல. ஆனால் இனங்களின் அடிப்படையில் இலங்கையில் பிரிவினைக்காக ஐ.நா. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமென்ற பரிந்துரையை முன்வைப்பதானது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தயக்கமின்றி எதிர்ப்பதற்கான விளைவை மட்டுமே இது கொண்டிருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியாயமற்ற கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக வெளிப்படுத்துவதானது சிறிய அளவு அனுகூலத்தை வென்றெடுப்பதிலும் பார்க்க நிலைமையை மோசமாக்குகின்றது.

கொசோவோ, மொன்ரனிகிரோ, தெற்கு சூடான் அல்லது கிழக்கு திமோரை இலங்கைக்கு எந்த விதத்திலும் ஒப்பிடக் கூடியதாக இல்லை. சர்வஜன வாக்கெடுப்புகள் அல்லது வெளிமட்டத் தலையீடுகளின் மூலம் புதிய தேசங்கள் உருவாக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே கருணாநிதி பார்க்கின்றார்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதனை நம்பிக்கையளிக்கும் வகையில் வலுவானதாக உருவாக்கும் விடயத்தை அவர் நாடியிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணமொன்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

செக்கோசிலாவாக்கியா பற்றி அவர் உதாரணம் காட்டியிருந்தார். செக்கோசிலாவாக்கியாவானது செக் குடியரசாகவும் சிலவாக்கியாவாகவும் பிரிந்திருந்தது. கருணாநிதியின் வார்த்தைகளில் இந்த விடயமானது, குருதி சிந்தாத பிரிவினையாகும்.

கடுமையான வேறுபாடுகள், பிளவுகள் நிலவும் நாடொன்றின் மோதலுக்கு சமாதானமான தீர்வாக அவர் இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அர்த்தமெதுவும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஆரவாரத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசிடம் எழுப்புவதற்கு தி.மு.க. தலைவர் சிறப்பான முறையில் செயற்பட முடியும்.

நீண்டகாலமாகத் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு துரிதமான பெறுபேறை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு மௌனமாகவோ அல்லது இதர வழியிலோ கருணாநிதி உதவமுடியும்.

இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே சமயம் அங்குள்ள தமிழர்களுக்கு விரைவான பெறுபேறுகளை எட்டக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வழங்குவதற்கு கருணாநிதி உதவ வேண்டும்.

நல்நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நாடும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டுடன் சிறந்த உறவை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணரவில்லை: டியூ குணசேகர

Posted: 24 Apr 2012 07:35 AM PDT



தமிழ் நாட்டுடன் சிறந்த உறவை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை கடந்த கால அரசாங்கங்களோ தற்போதைய அரசாங்கமோ உணரவில்லை. அதனால் தமிழக முதலமைச்சர் எவரும் சுதந்திரத்தின்பின் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற லலித் அத்துலத்முதலி நினைவு சொற்பொழிவின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொழி, கலாசாரம் உட்பட பல விடயங்களில் இலங்கையின் வட பகுதியிலுள்ள மக்களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கும் இடையில் பொதுவானவையாக உள்ளன என்பதை இலங்கை உணரத்தவறிவிட்டது.

இலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே 20 மைல்கள் மாத்திரமே இடைவெளி உள்ளது. அதேவேளை, உலக மயமாக்கலின் யதார்த்தத்தின் கீழ் இலங்கை தனது அயல் நாட்டை புறக்கணித்துவிட முடியாது என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவானது, இவ்விஜயம் முழுவதும் இந்தியாவின் தேசிய நலன்களுக்காக செயற்பட்டமை இலங்கைக்கு ஓர் முன்னுதாரணம் எனவும் அமைச்சர் கூறினார்.

புதுடெல்லியைவிட தமிழ்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், யாழ்ப்பாணத்திற்கு வான் வழியாக இந்தியா உதவிப் பொருட்களை வழங்க தீர்மானித்தபோது லலித் அத்துலத்முதலி அதை எவ்வாறு ராஜதந்திர ரீதியாக கையாண்டார் என்பதையும் அமைச்சர் குணசேகர நினைவு கூர்ந்தார்.

வடக்கில் வான் வழியாக உணவுப்பொருட்களை விநியோகிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக எச்சரித்து, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திய எழுதிய கடிதத்திற்கான பதிலை லலித் அத்துலத் முதலியே வரைந்தார் என அமைச்சர் குணசேகர கூறினார்.

போலிக் கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முற்பட்டவருக்கு கடூழிய சிறையும் அபராதமும்!

Posted: 24 Apr 2012 07:34 AM PDT



போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவருக்கு நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க ஒரு இலட்சம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையையும் வழங்கினார்.


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.முரளிதரன் என்பவருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

சந்தேகநபர் 2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இத்தாலி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்த போது இவரின் கடவுச் சீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரிசீலித்தனர்.

அப்போது இக்கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 18ம் திகதி இவர் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் இத் தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை பயண அறிக்கை இந்திய அரசிடம் இன்று கையளிப்பு

Posted: 24 Apr 2012 07:33 AM PDT


இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், இன்று தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர், கிருஸ்ணசாமி, சித்தன் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா ஆகியோரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஒன்றிணைந்து அறிக்கையை கையளிக்க வேண்டும் என்று பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் பொன். இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும், அவ்வாறு ஒன்றிணைந்த அறிக்கையை கையளிக்கும் ஏற்பாடுகள் ஏதும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இந்தப் பயணத்தில் பங்கேற்ற ரங்கராஜன், தானும் ஒரு அறிக்கையை இந்திய மத்திய அரசுக்கு கையளிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக் அதிரடியில் டெல்லி டேர்டெவில்ஸ் அபார வெற்றி

Posted: 24 Apr 2012 07:31 AM PDT

ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 147 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கேப்டன் ஷேவாக்கின் அதிரடியில் ஆட்டம் மூலம் 16வது ஓவரிலேயே வெற்றிக் கனியை பறித்தது.

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் ரன் கணக்கை துவக்காமலேயே இர்பான் பதானின் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரில் கேப்டன் செளரவ் கங்குலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு வந்த மனீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா உடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். மனீஷ் பாண்டே 3 முறை கேட்ச் கொடுத்தும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் கோட்டைவிட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மனீஷ் பாண்டே 56 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 7 பவுண்டரிகளை விளாசி 80 ரன்களை குவித்தார்.

ராபின் உத்தப்பா துவக்கம் முதலே பொறுமையாக ஆடினர். 56 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளை அடித்து 60 ரன்களை சேர்த்தார். இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 146 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக இர்பான் பதான், மோனி மார்கல் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

147 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இந்த நிலையில் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயவர்த்தனே 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

அதன்பிறகு கேப்டன் ஷேவாக் உடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். ஷேவாக் அதிரடியை தொடர, பீட்டர்சன் பொறுமையாக ஆடி வந்தார். ஷேவாக் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 21 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த பீட்டர்சன் 27 ரன்கள் எடுத்த ஜெஸ்ஸி ரைடரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16வது ஓவரில் வெற்றிப் பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசிய ஷேவாக் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் ஷேவாக் 48 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் விளாசி 87 ரன்களை குவித்தார்.