சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


கருணாநிதி வித்தை காட்டுகிறார்!- பழ.நெடுமாறன்

Posted: 30 Apr 2012 09:53 AM PDT

திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு வழங்கியிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக விரும்புகிறார். இதனாலேயே தமிழீழக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு வித்தை காண்பிக்கிறார் என உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.

வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

104 வயதில் பரசூட்டில் பறந்து சாதனைப் படைத்த பாட்டி (வீடியோ, படங்கள் இணைப்பு)

Posted: 30 Apr 2012 09:52 AM PDT

வடக்கு சைப்ரஸைச் சேர்ந்த திருமதி பெகி மெக் ஆல்பைன் தன் 104-வது வயதில் 2400 அடி உயரத்தில் பரசூட்டில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

இரு பிள்ளைகள், நான்கு பேரப் பிள்ளைகள் இரண்டு கொள்ளுப் பேரப்பிள்ளைகளைப் உள்ளனர் பெகிக்கு. இவருக்கு மலையேறுவது மிகவும் பிடித்த விடயமாகும். மலையில் ஏறிப்போய் அங்கிருந்து கீழே எறுப்பு போலத் தெரியும் மனிதர்களைப் பார்ப்பதில் அவருக்கு மகிழ்ச்சி அதிகம்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவர் செய்திருந்த சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த 101 வயது பெண்ணான மேரி ஆலன் ஹேடிசன் முறியடித்து விட்டார். எனவே மீண்டும் இப்போது பெகி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த சாதனையை வேறு யாரேனும் முறியடித்தால் தான் மீண்டும் புதிய சாதனை படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.







பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்

Posted: 30 Apr 2012 09:48 AM PDT

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.

இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும், கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

லிபியாவின் முன்னாள் பிரதமர் ஆற்றில் சடலமாக மீட்பு(வீடியோ, படங்கள் இணைப்பு)

Posted: 30 Apr 2012 09:45 AM PDT

லிபியாவின் முன்னாள் பிரதமர் சுக்ரி கானெம்(வயது 69), ஆஸ்திரியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை லிபியாவின் பிரதமராக பதவி வகித்தார்.

அதன்பின் எண்ணெய் வளத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர், கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடந்தாண்டு மே மாதம் லிபியாவிலிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் வியன்னாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் சடலம் டனுபே நதியிலருந்து நேற்று மீட்கப்பட்டதாக ஆஸ்திரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வன்முறைகள் ஏதும் இடம்பெற்றதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.




சம்சுங் அறிமுகப்படு​த்தும் 7 CHRONOS 17 நோட்புக்

Posted: 30 Apr 2012 09:43 AM PDT

இலத்திரனியற் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான சம்சுங் நிறுவனம் 7 CHRONOS 17 என்ற தனது புதிய நோட்புக்கை வெளியிடுகின்றது.

1920 x 1080 pixels கொண்ட 17 அங்குல திரையுடன் கூடிய இக்கணணிகள் Core i7 quad core processors களை உள்ளடக்கியுள்ளன.

அத்துடன் இதன் ஆரம்பத் தொழிற்பாடு வேகம் அதிகமாக காணப்படுகின்றது. அதாவது கணணியை இயக்கி வெறும் இரண்டு செக்கன்களிலேயே டெக்ஸ்டொப் பகுதியை செயற்படச் செய்கின்றது.

மேலும் இவற்றின் முதன்மை நினைவகமான RAM 8GB ஆகக் காணப்படுகின்றது. தவிர இதன் மின்கலமானது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்த பின் தொடர்ச்சியாக எட்டு மணித்தியாலங்கள் வரை கணணியை இயக்கவல்லது.




பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை!- கருணாநிதி

Posted: 30 Apr 2012 09:12 AM PDT


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார்.


மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று அவரிடம் கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார்.

போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் மரணம் இல்லை: கருணாநிதி 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இன்று டெசோ அமைப்பின் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சனையை தீவிரமாக கையில் எடுப்பதாக கூறுகிறார்களே?

பதில்: ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப் படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப் படை இந்தியா வந்தபோது அன்று முதலமைச்சராக இருந்த நான் வரவேற்கச் செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதைத் தடுக்க தவறிய நீங்கள் இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாக விமர்சிக்கிறார்களே?

பதில்: விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். நாங்கள் ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்?.

பதில்: முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

பதில்: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

பதில்: உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது திமுகவால் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்: அவர்களை ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. என்றார்

இலங்கையில் மசூதிகள், கோயில்களை நாசப்படுத்தும் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவை! கருணாநிதி

Posted: 30 Apr 2012 09:11 AM PDT


மசூதிகள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர். இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். 



இலங்கையில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி குறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

கலைஞர்:- இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ள என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

தென்னிலங்கையில் தம்புள்ள என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது,

இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் ராஜபக்ச அரசு - சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுவதிலும், சிங்கள மொழி ஒன்றையே முதன்மை இடத்தில் வைத்துக் கொண்டாடுவதிலும், இலங்கை முழுவதையும் பௌத்த மயமாக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவர்.

இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர்களை விரட்டி அடித்து விட்டு சிங்களர்களை குடியேற்றுதல், மிச்சமிருக்கும் தமிழர் பகுதிகளை எந்நேரமும் இராணுவக் கண்காணிப்பில் வைத்திருத்தல், இந்துக் கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் நாசப்படுத்துதல் போன்ற இன - மதங்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

அவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை.

மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர். இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை. என்றார்.

செ‌ங்க‌ல்ப‌ட்டு முகா‌மி‌ல் உண்ணாவிரதம் இருந்த 15 பேரை விடுதலை செய்ய அரசு சம்மதம்

Posted: 30 Apr 2012 09:10 AM PDT


தமிழகம், செங்கல்பட்டு இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை விடுதலைசெய்யக் கோரி கடந்த 18ம் திகதி தொடக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்திவந்துள்ள நிலையில் அவர்களில் 15 பேரை விடுதலைசெய்ய தமிழக அரசு சம்'மதம் தெரிவித்துள்ளதாக அறியவந்துள்ளது.


செ‌ங்க‌ல்ப‌ட்டு அ‌க‌திக‌ள் முகா‌மி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் 100க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அ‌ங்கு ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தங்களை விடுதலை செய்யக் கோ‌ரி கட‌ந்த 17ஆ‌ம் திகதி முத‌ல் ஈழ‌த்த‌‌மிழ‌ர்க‌ள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உ‌ள்பட 14 பே‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வந்தனர்.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு முகாம் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு, ஒரு மாதத்திற்குள் 15 பேர்களை விடுதலை செய்ய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வு வேண்டுமானால் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள்!- அமைச்சர் நிமால் சிறிபால தெரிவிப்பு

Posted: 30 Apr 2012 09:09 AM PDT



பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புமாயின் உடனடியாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும். என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 



நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது,

பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் அல்லது தயார் எனின் அவர்கள் முதலில் செய்யவேண்டியது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குவதாகும்.

சபாநாயகரைத் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இதனை செய்யவேண்டும். அதாவது கூட்டங்களில் கலந்துகொண்டு இவ்வாறு பேச்சு மூலம் தீர்வுகாண நாங்கள் தயார் என்று கூட்டமைப்பு கூறுவதில் அர்த்தம் இல்லை.

இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத நிலையில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகின்றோம்.

அதாவது ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேச்சு நடத்தி அரசியல் தீர்வைக் காண முன்வரவேண்டும்.

இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மாவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்றார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் எதிர்வரும் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்க தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குளிர்பான விற்பனை நிலையத்தில் ஆயுத முனையில் நகைகள், பணம், கைத்தொலைபேசிகள் கொள்ளை! திருமுறிகண்டியில் சம்பவம்

Posted: 30 Apr 2012 09:08 AM PDT


திருமுறிகண்டியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் ஒன்றில் சனிக்கிழமை இரவு நுழைந்த ஆயுதம் தரித்த மூன்று பேர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டி ஒன்று தங்க நகைகள், ரொக்கப் பணம், கைத்தொலைபேசிகள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்ற கார்டுகள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.


இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

ஏ9 வீதியில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் திருமுறிகண்டியில் பிரதான வீதியில் அமைந்துள்ள குளிர்பான விற்பனை நிலையத்தின் பின்னால் உள்ள உரிமையாளரின் வீட்டுக்குள் இரவு ஒன்றரை மணியளவில் 3 பேர் அடங்கிய கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

கதவைத் தட்டி நித்திரையில் இருந்த வீட்டுக்காரராகிய சதாசிவம் சிவசுந்தரராஜ் என்பவரை எழுப்பி கதவைத் திறக்கச் செய்து வீட்டினுள் சென்று அவரையும் அவரது மனைவி மற்றும் வீட்டிலிருந்தவர்களையும் ரைபிள் மற்றும் கத்தி என்பவற்றைக் காட்டி சத்தம் போட வேண்டாம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்காரரின் மனைவி கையில் அணிந்திருந்த ஒரு சோடி காப்பு, கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி என்பவற்றையும் அபகரித்ததுடன், வீட்டின் முன்னால் ஏ9 வீதியில் அமைந்துள்ள வீட்டுக்காரருக்குச் சொந்தமான குளிர்பான நிலையத்தின் திறப்புக்களையும் எடுத்து கடையைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம், இரண்டு கைத்தொலைபேசிகள், கைத்தொலைபேசிகளுக்குரிய முன்கொடுப்பனவு அட்டைகள் என்பவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகி யுள்ளனர்.

துணியால் முகத்தை மூடிக் கட்டியிருந்த கொள்ளையர்கள் 3 பேரில் இருவர் ரைபிள்கள் வைத்திருந்ததாகவும், மற்றவர் கத்தி வைத்திருந்ததாகவும் பொலிஸாருக்கு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் தமிழிலும் சிங்களத்திலும் சரளமாக உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில் இராணுவ காவலரண் ஒன்று இருப்பதாகவும், கொள்ளை நடைபெற்ற கடை மற்றும் வீட்டின் பின்பக்கமாக சுமார் 300 மீற்றர் தொலைவில் பொன்னகர் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட வேலை நடைபெறுவதாகவும், அங்கு பணிபுரிபவர்கள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கொள்ளையடித்ததன் பின்னர் பொன்னகர் பக்கமாகவே சென்றதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி அறிந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரைபிள்கள் ஏந்தி வந்து ஆயுத முனையில் நடத்தப்பட்டுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து, திருமுறிகண்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்தவும்: மகிந்தவுக்கு பான் கீ மூன் அழுத்தம்

Posted: 30 Apr 2012 09:07 AM PDT


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலுவான அரசியல் அதிகாரம் உள்ள நிலையில், கூடிய விரைவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கீ மூன், 'இந்தியா ரூடே'க்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற கடினமான வழியை இலங்கை மேற்கொண்டதை நான் மதிக்கின்றேன். ஆனால் இராணுவ நடவடிக்கையில் இறுதி சில மாதங்களில் துரதிஸ்டவசமாக பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொலலப்பட்டனர். மனித உரிமைகள் மிக மாசமாக மீறப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து பொருத்தமான சமூக அரசியல் வழியில் பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் நான் கேட்டுக் கொண்டேன். இதற்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நான் ஒரு நிபுணர் குழுவை நியமித்தேன். அனைத்துலக சமூகத்திடமிருந்து எழுந்த பலமான கோரிக்கைகளையடுத்து இலங்கை அரசும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. அது நல்ல பரிந்துரைகளை செய்தது.

இலங்கை ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த மீளத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் பலமான ஆணையைக் கொண்டுள்ளார். முழுமையான பொறுப்புக் கூறும் பொறிமுறை மிக விரைவில் உருவாக்கப்பட வேண்டும். என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல்: உலக தமிழர் பேரவை கண்டனம்

Posted: 30 Apr 2012 09:04 AM PDT


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக லண்டனை தலைமையகமாக கொண்ட உலக தமிழர் பேரவை மற்றும் ஒரு முன்னணியை உருவாக்கியுள்ளதாக இலங்கையின் தே ஐலேன்ட் செய்திதாள் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் இறைமைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பெரும்பான்மையின பௌத்த பிக்குகளே தம்புள்ளை பள்ளிவாசலை தாக்கியதாக சுரேன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், சர்வதிகார வழிகளை கையாள்வதாக அவர் குற்றம் அவர் சுமத்தியுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வழிகாட்டலிலேயே சிறுபான்மையினருக்கான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இதற்கு உதாரணமாக ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, தம்புள்ளை பள்ளிவாசல் தகர்க்கப்படவேண்டும் என்று கோரியிருந்தமையை சுரேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வடக்குகிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம், பௌத்த விஹாரைகளை அமைத்து வருவதும் இந்து மற்றும் கிறிஸ்தவ கோயில்களை நிர்மாணிக்க மறுத்துவரும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர், உலக தமிழர் பேரவை, தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைவதாக குற்றம் சுமத்தியுள்ளார் என்று தே ஐலேன்ட் குறிப்பிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்: மேர்வின் சில்வா

Posted: 30 Apr 2012 09:01 AM PDT


தன் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு ஒன்று உள்ளது என யாராவது நிரூபிப்பார்களானால், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டு வாக்குகளை பெற்ற தான், பொதுமக்களிடம் கூறிவிட்டு அமைச்சு பதவி மற்றும் அரசியலில் இருந்துவிலகப் போவதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


மக்கள் தொடர்பு மற்றும் பொது செயற்பாடுகளுக்கான அமைச்சின் ஊடான சேவையை கிராமத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "ஜனசெத்தட ஜனஹவுல" 
என்ற வேலைத்திட்டத்தின் கம்பஹா மாவட்டத்தின் இறுதி நடமாடும் சேவை நீர்கொழும்பு நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அவர், தாம் ஊடகங்கள் மீது மிகுந்த அன்புடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள ஊடகங்கள் சர்வதேசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வதாக மர்வின் சில்வா தெரிவித்தார்.

இருந்த போதும், சில ஊடகங்கள் துரோகமிழைக்கும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.தம்மீது சேறுபூசும் வகையில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானதாகவும், அதில் 
தாம் ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்

மிகக் குறைந்த வேதனத்திற்காக தொழிலை மாற்றிக் கொண்ட அந்த பத்திரிகையின் ஆசிரியர் தன்னிடம் நேர்காணல் ஒன்றை நடத்துவதற்கு கோரிக்கைவிடுத்ததாகவும், மூன்று 
நேரமும் சோறு சாப்பிடும் தமக்கு அவ்வாறான விடயங்களில் கலந்து கொள்வதற்கு நேரமோ, இணக்கமோ இல்லை என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

தமது சொத்து விபரங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே ஊழல் மற்றும் மோசடிகள் தடுப்பு திணைக்களத்திற்கு சென்றதாக குறிப்பிட்ட அவர், தன்மீது எதற்காக 
தேசிய நாளிதழ்கள் இவ்வாறு சேறு பூசுகின்றன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை

Posted: 30 Apr 2012 09:01 AM PDT


ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ் மற்றும் லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவே இன்று இலங்கை வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகளின் ஊடாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காகவும், ஆளும், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கிலும் இவர்களுடைய விஜயம் அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது

Posted: 30 Apr 2012 09:00 AM PDT


இலங்கையில் இருந்து ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துவரப்பட்டவர்கள் என்று சந்தேகத்தின் பேரில் இலங்கையை சேர்ந்த இருவர் கொல்லம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கைதுசெய்யப்பட்டவர், தனபாலசிங்கம் மற்றும் ஸ்ரீதாசன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும், காவநாட் நகர மக்கள் விசாரித்த போது, பதில் எதனையும் உரியமுறையில் வழங்காமையால் தாக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தனபாலசிங்கம் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் விசாரணையின் போது இருவரும் தாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காகவே இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிரந்தர அசியல் தீர்வை பெறுவரை தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும் - சீ.யோகேஸ்வரன்

Posted: 30 Apr 2012 08:59 AM PDT


நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக எங்களது உரிமைக்காக, எமது மக்கள் பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளார்கள். இரண்டு இலட்சத்தக்கு மேல் உயிர்களை இழந்துள்ளோம். ஆனால் எமக்கு அடிப்படை உரிமைகள் கூட இந்த நாட்டில் இல்லை என என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அச்சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆயிரக்கணக்கானோர் பலர் அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும், தபுதாரர்களாகவும், அநாதைகளாகவும் மாறியுள்ளனர். இருப்பிடங்கள், சொத்துக்கள், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் உட்பட பலவற்றை இந்நாட்டில் இழந்துள்ளோம். இவ் இழப்புக்களை அனுபவித்த எமது இனம் தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்தே ஆக வேண்டும்.

இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்கை நோக்கி, வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சிறந்த அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் எமக்கு வழங்க வேண்டிய சகல அதிகாரங்களையும் கொண்ட நிரந்தர அரசியல் தீர்வை பெறும் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

எங்களது செயற்பாட்டுக்கு ஆதரவு தரவேண்டிய கடமை எம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆகவே பொறுமையை பாதுகாத்து எங்களது நோக்கத்தை நிறைவேற்ற எங்களுடன் என்றும் துணையாக எமது தமிழ் மக்கள் அனைவரும் நிற்க வேண்டும்

இன்று சில அரசியல்வாதிகள் கிழக்கு மட்டும் தனியாக இருக்க வேண்டும். எங்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என பிரதேசவாதம் பேசி, தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்காது தமது சுயநல அரசியல் தேவையை நிறைவேற்ற முனைகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். என்றும் உணர்வு மிக்க தமிழர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சிரேஷ்ட உறுப்பினர்களை ஜனாதிபதி உதாசீனப்படுத்தினால் விபரீதத்தை எதிர்கொள்ள நேரிடும்! ஜயரத்ன ஹேரத்

Posted: 30 Apr 2012 08:58 AM PDT


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை மகிந்த ராஜபக்‌ச தொடர்ந்தும் உதாசீனப்படுத்தினால் அதற்கான விபரீதத்தை விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.


குருணாலில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு தாவிய உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அனைத்து சலுகைகளையும் வழங்குகிறார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை உதாசீனம் செய்துவருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை ஜனாதிபதி விரைவில் சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க முடியாது என பிரதியமைச்சர் இதன்போது எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு தாவிய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு ஜனாதிபதி ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளமையே பிரதியமைச்சருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அடிப்படைக் காரணமாக உள்ளதென இந்த இரகசியக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் ஆதரவுடன் அந்தப் பிரதேசத்தில் தான்தோன்றித்தனமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் குருணாகல் தொகுதியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் இதுகுறித்து தொடர்ந்து இவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் இந்தக் கூட்டத்தின்போத கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

பிரதியமைச்சர் ஜயரத்ன ஹேரத்திற்கு மேலதிகமாக, அநுர பிரியதர்சன யாப்பா, சாலிந்த திஸாநாயக்க, எஸ்.பீ. நாவின்ன, டி.பீ.ஏக்கநாயக்க உள்ளிட்ட குருணாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீ.ல.சு.கட்சியின் பல உறுப்பினர்களும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது அதிருப்திகொண்டுள்ளனர்.

தலையாட்டும் மந்தைகளாகவே எம்மை நடத்துகின்ற அரசியல் கட்சியின் பிடியில் இருந்து விடுவியுங்கள்! ரணிலிடம் நெடுந்தீவு மக்கள் கோரிக்கை

Posted: 30 Apr 2012 08:57 AM PDT


நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்திருக்கும் கட்சி ஒன்று ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் மக்களை அடிமைபோல நடத்துகிறது. இந்த அடிமைத் தளையிலிருந்து நெடுந்தீவு மக்களை விடுவிக்க வேண்டும் என்று நெடுந்தீவு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.


எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்தமுறை நடத்தவுள்ள மேதின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று நெடுந்தீவுக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கேட்டபோதே மேற்குறித்த கோரிக்கையை மக்கள் அவரிடம் முன்வைத்தனர்.

இதன்போது பொதுமக்கள் ரணிலிடம் தெரிவித்தவை வருமாறு:

ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கட்சி ஒன்று நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்துக்கொண்டு மக்களை அடிமை போல நடத்தி வருகிறது. இங்கு ஜனநாயகம் என்பது துளியளவும் இல்லை. குறித்த கட்சியின் உத்தரவுகளை மீறுபவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

இதனால் நெடுந்தீவில் மக்கள் பீதியுடனேயே வாழ்கின்றார்கள். ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக இங்கு மாற்று அரசியல் கட்சிகள் வருவதைக் கூட அவர்கள் தடை செய்துள்ளனர். அதையும் மீறி வரும் கட்சிகள் மீது கடும் அழுத்தங்களை அவர்கள் மேற்கொள்வார்கள்.

இன்று எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் பயணிப்பதற்குக் கூட எவரும் வாகனங்களை கொடுக்கக் கூடாது என்று எம்மில் பலர் மிரட்டப்பட்டனர். இவ்வாறு அவர்களின் சொற்படி தலையாட்டும் மந்தைகளாகவே எம்மை நடத்துகிறார்கள். இல்லாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

இப்போது இந்த உண்மைகளை உங்களிடம் தெரிவித்ததால் சில வேளைகளில் வெள்ளை வானிலோ அல்லது வெள்ளைப் படகிலோ நாங்கள் கடத்தப்படும் நிலையும் ஏற்படலாம். என்றனர். 

இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது,

வடக்கில் குறிப்பாக நெடுந்தீவில் அரசியல் கட்சி ஒன்று மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதை நானும் அறிவேன். இங்கு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இந்த விடயம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜெனிவா மாநாட்டிலும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையை நீக்க வழி செய்யுமாறு நெடுந்தீவுப் பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன். நாடாளுமன்றத்திலும் இது பற்றி நான் தொடர்ந்தும் குரலெழுப்புவேன். என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெடுந்தீவுப் பயணத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு: டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted: 30 Apr 2012 08:56 AM PDT


தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இன்று நடைபெற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி தலைமையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது.

இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அமைப்பின் குறிக்கோள்

பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம் மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணிஅணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வ தேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில்கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது.

தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

காலிமுகத்திடல் கடலில் நீராடச்சென்ற இளைஞர் காணாமல் போயுள்ளார்

Posted: 30 Apr 2012 08:55 AM PDT


கொழும்பு காலிமுகத்திடல் அருகில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் கடல் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.


நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மேலும் தனது நண்பர் சிலருடன் நீராடச்சென்றிருந்த போதே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

காணாமற் போனவரை தேடும் பணிகள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உங்களில் ஒருவரே எங்களின் தற்போதைய தலைவர்!– புதிய ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவர் புகழாரம்

Posted: 30 Apr 2012 08:55 AM PDT



பல்லின சமூகத்தவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்ராறியோ மாகாணத்தின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் எங்களில் ஒருவர் அதிலும் உங்களின் இனத்தவர். இது தமிழர்களிற்கு பெருமை தரக்கூடிய விடயமாகும்


நேற்று முன்தினம் ரொறன்ரோவில் இடம்பெற்ற கனடியத் தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவர் அன்ரியா ஹவார்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்

சுமார் 700 மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட கனடிய வர்த்தக சம்மேளனத்தின் 21வது விருது வழங்கும் விழாவில் பிரதம அதீதியாகக் கலந்து கொண்ட ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினரும், புதிய ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவர் திருமதி அன்ரியா ஹவார்த் மேலும் அங்கு பேசுகையில்,

பல்லின சமூகத்தவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாரியோ மாகாணத்தின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், எங்களில் ஒருவர், அதிலும் உங்களின் இனத்தவர். இது தமிழர்களிற்கு பெருமை தரக்கூடிய விடயமாகும் எனக் குறிப்பிட்டதுடன்,

தமிழினம் இக் காலத்தை நன்கே பயன்படுத்தி தங்களை புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைத்து ஒன்றாரியோவை வளம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீதன் சாண் அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டத்தைக் குறிப்பிட்டதோடு,

ஒன்ராறியோவில் ஒரு ஆட்சிமாற்றம் தேவையென்பதையும், அண்மையில் லிபரல்கட்சி அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் இதையே காட்டுகிறது எனவும் தெரிவித்ததோடு,

தனது தலைமையிலான அரசு பதவிக்கு வந்தால் ஒன்ராறியோவில் புதிதாகக் குடிவந்த சமூகத்திற்குத் தேவையான கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளில் மேலதிக முதலீடு செய்யப்படும் என்றும், வரிவீதக் குறைப்பு குறைந்த வருமாணத்தைப் பெறுபவர்களை முதன்மைப்படுத்தி செய்யப்படும் என்றும் அவைத்தலைவர் அன்ரியா ஹவார்த் தெரிவித்தார்.

1991ல் ஆரம்பிக்கப்பட்ட கனடிய வர்த்தக சம்மேளனம் கனடாவில் வளர்ந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவிப்பதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதாகவும் இது ஏனையோரை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் திரு. மைக் அகிலன் தெரிவித்தார்.



தேர்தல் அரசியலுக்கு அப்பால் சென்று மக்கள் அரசியலுக்கு தலைமை தந்தவர் தந்தை செல்வா!- மனோ கணேசன்

Posted: 30 Apr 2012 08:54 AM PDT


தமிழரசுக் கட்சியை ஆரம்பிப்பதற்கு, மலையக தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிப்பு விவகாரம் ஒரு பிரதான காரணமாக தந்தை செல்வாவிற்கு அமைந்திருந்தது. அதுபோல், முஸ்லிம் மக்களுக்கு அரசியல் அடையாளம் தேடிய முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் அஷ்ரப், உட்பட பலவேறு முஸ்லிம் தலைவர்களையும் அவர் அரவணைத்திருந்தார்.


இறுதியாக தமிழின ஒற்றுமை கருதி, தனது கட்சி அடையாளங்களுக்கு அப்பால் சென்று அவர் தமிழர் கூட்டணியை உருவாக்கினார். கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று, வட-கிழக்கு தமிழர்களுடன், மலையக தமிழர்களையும், முஸ்லிம்களையும் அரவணைத்து, தமிழ் பேசும் குடும்பத்தின் பெருந்தன்மைமிக்க உண்மை தந்தையாக அவர் திகழ்ந்தார்,என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில், தந்தை செல்வா நற்பணி மன்றம், வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவு நாள் நிகழ்வு, 15 வது வருடமாக நேற்று மாலை நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவர் தளையரத்தினம், கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, முஸ்லிம் காங்கிரசின் மசூர் மௌலானா, ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்ட, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது.

தந்தை செல்வா அடுத்து வரும் தேர்தல்களை எதிர்நோக்கி காய்களை நகர்த்தவில்லை. அவர் எப்போதும் அடுத்துவரும் தலைமுறையை எதிர்நோக்கியே காரியங்கள் ஆற்றினார்.

தூரப்பார்வை அவருக்கு துல்லியமாக இருந்தது. நெஞ்சில் நேர்மையுடன் அநீதியை எதிர்த்தபடி எதிர்காலத்தை நோக்கிய அரிய காரியங்களை செய்ய துணிபவன்தான் உண்மை தலைவன். 
தமிழர் வரலாற்றில் அந்த தலைமை தகைமைகொண்ட உண்மை தலைவன் ஈழத்து காந்தி தந்தை செல்வா.

தந்தை செல்வா மீண்டும் பிறந்துவர வேண்டும் என நான் விரும்புகின்றேன். அது பேராசையா அல்லது எனது கனவா என எனக்கு துல்லியமாக சொல்லத் தெரியவில்லை. ஒருகணம் இப்படி விரும்புகின்றேன். மறுகணத்தில் அவர் மறையவில்லை, எம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார் என நம்புகின்றேன். எம்மத்தியில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்கிறார் என நம்புகின்றேன். எமது இனம் ஆழிப்பேரலைகளில் சிக்கித் தவிக்கும் போது, அவர் ஒளி வெள்ளமாக வழி காட்டுகின்றார் என நம்புகின்றேன்.

கட்சிகள் மத்தியிலே ஒற்றுமையை ஏற்படுத்துவது எப்படி, தமிழ்பேசும் மக்கள் மத்தியிலே ஒற்றுமை ஏற்படுத்துவது எப்படி, இறுதியில் சிங்கள மக்களுடன், தமிழ் பேசும் மக்கள் சமத்துவத்துடன் கூடிய ஒற்றுமையை ஏற்படுத்தி கொள்வது எப்படி என எமக்கும், நாட்டுக்கும் அவர் வழி காட்டுகிறார்.

அதேபோல்,அடக்குமுறை எதேச்சதிகாரங்களுக்கு எதிராக ஜனநாயக -சாத்வீக -அஹிம்சா -சட்டமறுப்பு போராட்டங்களை முன்னெடுப்பது எப்படி என்பதையும், அவர் தனது வரலாற்றின் மூலம் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டுகிறார். இன்றைய புதிய தலைமுறை தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி கொண்டிருக்கின்றார் என நாம் உறுதியுடன் நம்புவோம்.

தந்தை செல்வாவிற்கு சளைக்காமல், வருடம் தோறும் தலைநகரில் நினைவுநாள் நிகழ்வு நடத்தும் தளையரத்தினத்தையும், அவரது தந்தை செல்வா நற்பணி மன்றத்து நண்பர்களையும் எத்துணை பாராட்டினாலும் தகும். இது இவர்கள் நடத்தும் 15 வது வருடாந்த நிகழ்வு என நினைக்கின்றேன்.

தந்தை செல்வாவின் பெயரை சொல்வதற்கே கொழும்பில் பலர் அஞ்சி நின்ற அந்த அச்சம் நிறைந்த கொடும் யுத்தம் நடைபெற்ற நாட்களில் கூட தளையரத்தினம் தலைநகரில் விழா நடத்தினார்.

தமிழர்களின் மீதான கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு எதிராகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் பல்வேறு ஜனநாயக போராட்டங்களை கொழும்பில் நடத்திக்கொண்டே,கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் அவரது, மன்றம் நடத்திய பெரும்பான்மையான நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளேன்.

தளையரத்தினத்தின் தந்தை செல்வா நற்பணி மன்ற பணிகளுக்கு என்னைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.

முல்லைத்தீவு பஸ்நிலையத்தில் பேருந்து தமிழ் சாரதி மீது படையினர் காட்டுமிராண்டித் தாக்குதல்!

Posted: 30 Apr 2012 08:53 AM PDT



முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் தென்னிலங்கை பயணிகள் பேருந்து உரிமையாளருக்கும், தமிழ் சாரதியொருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, அங்கு வந்த படையினர் பொதுமக்கள் முன்னிலையில் தமிழ் சாரதியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர். 



இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவத்தில் பேருந்தின் சாரதிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் தென்னிலங்கை சிங்கள சாரதி அருகிலுள்ள படைமுகாமிற்குச் சென்று விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அங்குவந்த சுமார் 5வரையான படையினர் தமிழ் சாரதியை பேருந்திலிருந்து இழுத்து கீழே வீழ்த்தியதுடன், கண்மூடித்தனமாக அவர் மீது தாக்குதலை நடத்தியயுள்ளனர்.

இது குறித்து பொதுமகன் ஒருவர் கூறுகையில்,

சாரதி நிலத்தில் வீழ்ந்து கிடக்க படையினர் சுற்றிநின்று கடுமையாகத் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து நகரில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

எனினும் சம்பவத்தையடுத்து அங்குவந்த மேலுமொரு தொகுதி படையினர் வழக்கம்போல் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவில் பேருந்துச் சாரதிகளும், நடத்துனர்களும் படையினரால் காட்டமிரண்டித்தனமாக தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றமையும் இதற்கெதிரான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருணாநிதியின் "தமிழீழம்" இலங்கை அரசு அவதானிக்கிறது என்கிறார் யாப்பா அபேவர்த்தன

Posted: 30 Apr 2012 08:51 AM PDT


தி.மு.கவின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் தமிழீழம் தொடர்பான பரப்புரைகளை இலங்கை அரசாங்கம் அவதானித்து வருகின்றது. இக்கருத்துக்களின் எதிர்கால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனைப் பொறுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதி அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழீழம் உருவாவதற்கு இந்தியா அரசு ஆதரவும் அழுத்தமும் வழங்க வேண்டும் என கருணாநிதி ஆரம்பத்தில் கூறியபோது, இது இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தல்ல என்பதால் அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலில் கருத்தில் கொள்ளவில்லை.

ஆனால் தமிழீழத்துக்கு ஆதரவான கருத்துக்களை கருணாநிதி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அத்துடன் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலுவும் தமிழீழத்துக்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றியிருந்தார்.

தமிழீழம் தொடர்பான கருணாநிதியின் பரப்புரைகள் தீவிரம் பெற்று வரும் நிலையில் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.

குறிப்பாக இந்திய மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி. மு.கவின் தலைவரும் முக்கிய அரசியல்வாதியுமான கருணாநிதி இவ்வாறு பரப்புரைகளை மேற்கொள்வதன் பின்னணி தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

எமது அரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கம் வகிப்பதுபோல் இந்திய அரசாங்கத்திலும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

எனவே கருணாநிதியின் கருத்துக்களை இந்திய அரசின் கருத்துக்களாக கருதத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.